கோலாலம்பூர், டிச. 24-

கம்போங் செகாம்புட் பெர்மாயில் தனியார் நிலத்தில் கிட்டத்தட்ட 30 வீடுகள் இடிக்கப்படுவது இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அங்கிருந்த குடியிருப்பாளர்கள் 14 நாட்கள் அவகாசத்திற்குள் அவ்விடத்தை விட்டு வெளியேறுவதற்கு இணக்கம் தெரிவித்ததால் மேம்பாட்டு நிறுவனமும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நில உரிமையாளர்கள், குடியிருப்பாளர்கள் இடையே இணக்கம் காணப்பட்டதன் விளைவாக கம்போங் செகாம்புட் பெர்மாயிலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு 14 நாட்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு தரப்பும் இணக்கம் தெரிவித்த காரணத்தினால் அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதமும் கையெழுத்திடப்பட்டது.

அதோடு அங்கிருந்த குடியிருப்பாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையையும் 14 நாட்களுக்குள் செலுத்துவதாக நில உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

”இந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் மாநகர மன்றத்தால் வழங்கப்படும் பி பி ஆர் வீடுகள் எங்களுக்கு கிடைக்குமா என்பதற்காகவே காத்திருக்கிறோம்”. ”அடுத்த 14 நாட்களுக்குள் கூட்டரசு பிரதேசம் அமைச்சரை சந்தித்து இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்போம்” என குடியிருப்பாளர் நசீம் தெரிவித்தார்.