வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > இந்தியக் குடியுரிமைச் சட்டம்: வேதனையை வெளிப்படுத்திய மலேசிய இந்திய முஸ்லிம்கள்!
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

இந்தியக் குடியுரிமைச் சட்டம்: வேதனையை வெளிப்படுத்திய மலேசிய இந்திய முஸ்லிம்கள்!

கோலாலம்பூர் டிச. 26-

இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களை ஓரங்கட்டும் நடவடிக்கையாக இருக்கின்றது. இந்தியா மதசார்பற்ற நாடு. அனைவரின் உரிமையையும் பாதுகாக்கப்பட வேண்டுமென மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தகச் சம்மேளனம் (மிம்கோயின்)கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக 4 அம்சங்கள் அடங்கிய மகஜரையும் மலேசியாவிற்கான இந்திய தூதரகத்தில் மிம்கோயின் தலைவர் டத்தோ சையிட் ஜமருல்கான் ஒப்படைத்தார். இதில் மலேசியா இந்திய முஸ்லிம்களைப் பிரதிநிதிக்கும் முதன்மையான 10 சமூக இயக்கங்களைச் சேர்ந்த 20 தலைவர்களும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இதில் மிம்கோயின் உட்பட மலேசிய முஸ்லிம் இந்திய சங்கத்தின் கூட்டமைப்பு பெர்மும், பினாங்கு முஸ்லிம் லீக், மலேசிய மலபாரி சங்கம் (உம்மா), சிலாங்கூர் இந்திய முஸ்லிம் சகோதரர்கள் சங்கம் ஆகியவையும் அடங்கும்.

2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னர் இந்தியாவிற்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள் சமணர்க,ள் பரிசேயர்கள், கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்ற இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் முழுவதிலும் கண்டனம் எழுந்துள்ளது.

அதோடு இந்திய குடிமக்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய தேசிய பதிவு அமல் படுத்த படுவது அங்குள்ள முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என டத்தோ சையிட் ஜமருல்கான் கூறினார்.

இந்தியா தனது சட்டத்தை மாற்றுவது அவர்களது உரிமை என்றாலும் இந்திய முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்ற கவலை தங்களுக்குள் நிலவுவதாக அவர் மேலும் கூறினார்.

தங்களின் நிலைப்பாடு குறித்து மகஜரை பெற்றுக்கொண்ட மலேசியாவிற்கான துணை இந்திய தூதர் அர்ச்சனா நாயரிடம் தாங்கள் விளக்கம் கேட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டம் அங்குள்ள இந்திய முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர்கள் விளக்கம் அளித்தாலும் அந்த நிலைப்பாட்டில தங்களுக்குச் சந்தேகம் இருப்பதாகவும் டத்தோ சையிட் ஜமருல்கான் கூறினார்.

இந்தச் சட்டத்தை இந்திய அரசு மீட்டுக் கொள்ள வேண்டும். அல்லது அனைத்து குடிமக்களுக்கும் சமமான குடியுரிமையை அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் குடிமக்களாகிய இந்திய முஸ்லிம்களுக்குப் போதுமான ஆவணங்கள் இல்லை என்றால் அவர்களின் குடியுரிமைக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன