திங்கட்கிழமை, மே 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 2019 -ல் மலேசிய அரசியல் !
முதன்மைச் செய்திகள்

2019 -ல் மலேசிய அரசியல் !

2019 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில், இந்த ஆண்டும் நாட்டின் அரசியல் வழக்கம் போலவே மக்களுக்கு தீனி போடும் ஒரு திரைப்படமாகவே அரங்கேறியுள்ளது. குறிப்பாக பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தில் பிரதமராக இருக்கும் துன் டாக்டர் மகாதீர் முஹமட் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே பிரதமராக நீடிப்பார் என கூறப்பட்டது. அந்த இரண்டு ஆண்டுகளுக்கான அவகாசம் வரும் மே மாதம் நிறைவு பெறவிருக்கிறது. ஆனால் அடுத்த ஆண்டில் நவம்பர் மாதம் நடைபெறும் ஏபேக் மாநாட்டுக்குப் பின்னரே பதவியை ஒப்படைப்பேன் என மகாதீர் தெரிவித்துள்ளார்.

அதிகார பரிமாற்றம் குறித்து தமக்கும் பிரதமருக்கும் இடையில் சுமூகமான உடன்பாடு உள்ளதாக பி.கே.ஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் வருடம் முழுவதும் ஒரே பல்லவியை பாடி வந்தார். எனினும் இந்த அதிகார பரிமாற்றத்துக்கு அவரின் ஆதரவாளர்கள் 2020 ஆம் ஆண்டிலும் பொறுமையாக இருப்பார்களா என்ற கேள்வியுடம் எழத்தான் செய்கிறது. மலேசியாவின் எட்டாவது பிரதமராகும் அன்வாரின் கனவு நிறைவேறுமா என்பது 2020ல் தெரிய வரும்.

கொள்ளைப் புற வழியில் அரசாங்கம் !

அம்னோவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த நவம்பர் 18 ஆம் தேதி பி.கே.ஆர் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலியின் வீட்டில் சந்தித்தது 2019 ஆம் ஆண்டில் அரசியல் உலகின் மற்றொரு பரபரப்பு செய்தியாகும். அதுவும் ஜோகூர் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்ற சில நாட்களில் இந்த சந்திப்பு நடந்தது. இதனால் அம்னோ எம்.பி-க்களைக் கொண்டு கொள்ளைப் புற வழியாக அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் நடப்பதாக ஆளும், எதிர்கட்சி தரப்புகள் இரண்டு வரிந்து கட்டிக் கொண்டு அறிக்கைப் போர்களை நடத்தின. அதேவேளையில் பேரா, மலாக்கா மாநிலங்களில் ஆளும் அரசாங்கத்தில் நடந்த உட்தேசல்களீனால் அந்த இரண்டு மாநிலங்களிலும் கொள்ளைப் புற வழியாக அரசாங்கம் அமைக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வெளியாகி கடைசியில் அவை பொய்ச் செய்தியாகவே பார்க்கப்பட்டது.

தேசிய நல்லிணக்கத்தில் அம்னோ – பாஸ் இணைந்தது !

1977 ஆம் ஆண்டில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறிய பாஸ் மீண்டும் அம்னோவுடன் இணைந்தது 2019 ஆம் ஆண்டின் மற்றொரு ஹைலைட்டாகும். தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் அந்த இரண்டு கட்சிகளும் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெரும்பாலான இடைத் தேர்தல்களில் இணைந்து செயல்பட்டன.

இதில் சில இடைத் தேர்தல்களில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு பாஸ் கட்சியின் ஒத்துழைப்பு மிகப் பெரிய பலமாகும். 15 ஆவது பொதுத் தேர்தல் வரை இந்த தேசிய நல்லிணக்கம் தொடருமா என்பது அரசியல் உலகைப் பொறுத்தவரை ஒரு மிகப் பெரிய கேள்வி குறியாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன