2020இல் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுங்கள் -லிம் குவான் எங்

0
4

கோலாலம்பூர், டிசம்பர் 31-

2018ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி தேர்தலுக்கு முன்னர் நம்பிக்கை கூட்டணி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை 2020இல் சிறப்பாக நிறைவேற்றுமாறு ஜனநாயக செயல் கட்சியின் பொதுச்செயலாளர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார்.

2020ஆம் ஆண்டிற்கான தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் நிதி அமைச்சருமான லிம் குவான் எங் கூறினார்.

சர்வதேச நிறுவனங்களின் கடன் மதிப்பீடுகளின் முன்னேற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் அதிகரிப்பு ஆகியவை மலேசியாவின் பொருளாதாரம் குறித்த கவலையை குறைத்துள்ளது. இருப்பினும் நம்பிக்கை கூட்டணி அரசியல் நிலைமை குறித்து இன்னமும் சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக 2020ஆம் ஆண்டில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான அடித்தளம் அமைக்கப்பட வேண்டுமென அவர் கூறினார். அதோடு மலேசியாவில் ஒரு வலுவான பொருளாதார பலத்தை எதிர்பார்க்கும் மக்கள், துன் டாக்டர் மகாதீர், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோருக்கிடையிலான தலைமைத்துவ மாற்றமும் சுமூகமான முறையில் நடைபெற வேண்டும் என விரும்புவதாக லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

2020ஆம் ஆண்டு 2019ஆம் ஆண்டை காட்டிலும் மிகச் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மேலும் கூறினார்.

இந்தப் புதிய ஆண்டில் மத விரோதம் மற்றும் இனப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். மத தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். மலேசிய மக்கள் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என லிம் குவான் எங் குறிப்பிட்டார்.