2019ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல வருடம் என்றே சொல்லலாம். நல்ல நல்ல படங்கள் புது புது இயக்குனர்கள் என தமிழ் சினிமா பாராட்டுகளால் நிரம்பி வழிந்தது. முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரின் படங்கள் வெளியானதும். அதில் பிகில், விஸ்வாசம், பேட்ட  என பல படங்கள் 100 கோடி வசூலை தாண்டியது.

இந்நிலையில் தற்போது இந்த ஆண்டில் சிறந்த படங்கள் நிறையவே வெளிவந்தன. அதில் மிகச் சிறந்த 10 படங்களை அநேகன் தொகுத்திருக்கிறது.

  1. அசுரன் – 1980 மற்றும் 1960-களில் நடக்கும் கதையம்சத்தைக் கொண்டுள்ள இத்திரைப்படம் அதிரடியாகவும் அழுத்தமான வசனங்களுடன் சேர்ந்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் சாதிய ரீதியிலான பிரிவினைகளுக்கு எதிராக சுழட்டிய சாட்டை. தனுஷ், மஞ்சுவாரியர், டீஜெ, கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் தனுஷின் அசுர வேட்டை நடிப்புக்கு தீனி போட்டது மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய விவாதங்களை கிளப்பியது.
  1. கைதி – மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் கைதி. கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஓர் இரவிலேயே நடக்கும் கதை, ஹீரோயின், பாடல்கள் என வழக்கமான சினிமா பாணியிலிருந்து விலகி தனித்து நிற்கும் இந்தப் படத்தை பலரும் பாராட்டியதோடு வசூலையும் வாரிக் குவித்தது.
  1. சூப்பர் டீலக்ஸ் – ஆரண்ய காண்டம் படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் தியாகராஜா குமராராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், ஃபகத் ஃபாசில், சமந்தா, மிருணாளினி ரவி என பலர் நடிப்பில் உருவான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம், தமிழ் சினிமாவின் இத்தனை ஆண்டுகால கோட்பாடுகளை உடைத்து புது மாதிரியான ஒரு படமாக இந்த ஆண்டு வெளியானது. உலகளவில் பல விருதுகளையும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.
  1. தடம் – ஒரு உண்மை சம்பவங்களை திரைப்பட கதையாக அமைத்து பல திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. அதில் நிஜத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான உண்மை கதையினை திரில்லர் திரைக்கதையாக இயக்கி வெற்றிகண்டுள்ளார் இப்பட இயக்குனர் மகிழ் திருமேனி. அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த தடம் படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
  1. பேரன்பு – தந்தை மகள் பாசத்தையும், மனநோயில் பாதிக்கப்பட்ட மகளுக்கு தந்தையின் கடமைகளையும் பற்றி எடுத்துரைக்கும் திரைப்படம். எதார்த்தமான திரைக்கதை மற்றும் அழுத்தமான வசனங்கள் மூலம் பிரபலமான திரைப்படம். நடிகர் மமூட்டியின் நடிப்பில் உலகளவில் இந்த படமும் பல விருதுகளை குவித்து வந்தாலும், தியேட்டர்களில் மிகப்பெரிய வசூலை ஈட்ட முடியாமல், விமர்சன ரீதியாக மட்டுமே இந்த படம் வெற்றிப் பெற்றது.
  1. நேர் கொண்ட பார்வை : பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பற்றியும், பெண் சுதந்திரத்தை பற்றியும் விரிவாக பேசி இருக்கும் படம் தான், அஜித் நடிப்பில் வெளிவந்த நேர் கொண்ட பார்வை. இப்படம் ஹிந்தி படமான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.இப்படத்தில் அஜித் நேர்மையான வழக்கறிஞராக வலம் வந்திருப்பார். விஸ்வாசத்தின் வெற்றிக்கு பிறகு இப்படம் அஜித்துக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
  1. பிகில் – அட்லீ இயக்கத்தில் வெளியான படம் பிகில். விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் பெண்கள் காற்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டிற்கான வசூல் வரிசையில் பிகில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
  1. நம்ம வீட்டு பிள்ளை – மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் நம்ம வீட்டு பிள்ளை. சிவகார்த்திகேயனின் 16-வது படமான இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் தமிழ் குடும்பத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது. டி.இமான் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.
  1. கோமாளி- 6 ஆண்டுகள் கோமாவில் இருந்த ஒரு நோயாளி குணமடைவது, 90-களின் வாழ்ந்த குழந்தைகளின் விசயங்கள், கைத்தொலைப்பேசி மற்றும் கூகுள் மேப் பரிதாபங்கள், சென்டிமென்ட் என்று  பல விசயங்களை அழகாக அடுக்கி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார். ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
  1. ஒத்த செருப்பு – நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி தனி ஒருவனாக நடித்து அசத்தியிருந்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. பார்த்திபனின் இந்த புதிய பாதைக்கு தியேட்டரில் கூட்டம் கூடவில்லை என்றாலும், உலக அரங்கில் பல விருதுகளும் பாராட்டுக்களும் தொடர்ந்து குவிந்து வண்ணம் இருக்கிறது.