மக்களின் அதிருப்தியை அரசு அறிந்துள்ளது! – துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், ஜன 1-

2020 ஆம் ஆண்டு மலேசியர்களுக்கு அதிக மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருமெனப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டிலிருந்த கசப்பான மற்றும் இனிமையான நினைவுகள் நம்மைக் கடந்து சென்றுள்ளன.

2019 இல் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என நாம் கவலையில் இருந்த போதிலும் கடந்த ஆண்டு அரசு எடுத்த முயற்சிகள் வருங்காலத்தில் பலனைத் தரும் என மலேசியர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

”2019ஆம் ஆண்டு முழுவதும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பல பிரச்சினைகள் இருந்தன என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.” ”அவர்களின் ஆதங்கத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பதிலளிப்போம்.” என டாக்டர் மகாதீர் கூறினார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என டத்தாரான் மெர்டேகாவில் புத்தாண்டு கொண்டாட்டம், ”விசிட் மலேசியா 2020”ஐ தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

2020 ஆம் ஆண்டு மலேசியா வளர்ந்த தேசமாக உருவெடுக்கும் என தாம் 2020 தொலைநோக்குச் சிந்தனையை உருவாக்கியதை துன் மகாதீர் நினைவுகூர்ந்தார்.

ஆனால் தமக்குப் பிறகு நாட்டை வழிநடத்திய பிரதமர்கள் முன்னெடுத்த அணுகுமுறைகள் 2020 தொலைநோக்குச் சிந்தனையைச் சிதைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதோடு அந்த இலக்கை எட்டுவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் தேவைப்படும் என்றார் மகாதீர்.