ஊடகவியலாளர்களை மிரட்டாதீர்! – கோபிந்த் சிங் டியோ எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜன. 3-

ஊடகங்கள் புகார் அளிப்பதில் பொதுமக்கள் உடன்படவில்லை என்றால் அச்சுறுத்தல், வன்முறை அல்லது சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படக் கூடாது எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

ஊடக அறிக்கை உங்கள் கொள்கைக்கு உடன்படவில்லை என்றால் திருத்தங்களைச் செய்து மாறுபட்ட கருத்துக்களை அனுப்புவது தான் சிறந்த வழிமுறை என அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்களின் கடமை தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் உண்மைகளை வெளியிடுவதுதான். எனத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் பதிவிட்டு இருந்தார்.

டிவி3 தொலைக்காட்சி செய்தியாளர் முகமட் இஷ்ஹா அப்டில்லா புதன்கிழமை வெளியிட்ட செய்தி தொடர்பாக அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறியது குறித்துக் கோபிந்த் சிங் டியோ இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் குற்றம் நடந்தால், அது கண்டுபிடிக்கப்பட்டால் போலீஸ் துறை விசாரித்துக் கடுமையான நடவடிக்கையை எடுக்கும் எனத் தாம் நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திரங்கானு மாநிலத்திலுள்ள ஒரு சமய பள்ளி குறித்து வெளியான வீடியோ பதிவு சமூகத் தளங்களில் வைரலாகப் பரவி அதைத் தொடர்ந்து அந்த ஊடகவியலாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அந்தப் பள்ளியில் மின்சாரம், நீர் வடிகால் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுவதாகக் கூறப்பட்டது. இதன் தொடர்பில் போலீஸ் அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.