ஜாகிர் நாயக்கை அவமதித்த செந்தில்வேலு விசாரணைக்கு அழைக்கப்படுவார்!

சிரம்பான் ஜன. 6-

சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக் அவமதிக்கும் புகைப்படத்தைக் கடந்த சனிக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிட்டு சர்ச்சையைக் கிழப்பியதாக நம்பப்படும் சிரம்பான் நகராண்மைக் கழக உறுப்பினர் மீது போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.

முஸ்லிம்களின் உணர்வுகளைப் பாதித்ததாகக் கூறப்படும் அப்படத்தின் நிலை குறித்துப் பல்வேறு தரப்பினர் வெளியிட்ட 5 புகார்களின் அடிப்படையில் செந்தில் வேலு இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் எனச் சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சையித் இப்ராஹிம் தெரிவித்தார்.

தகவல் தொடர்பு பல்லூடக சட்டம் 1998 பிரிவு 233 மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 298, ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த விசாரணை எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும் நாங்கள் முதலில் விசாரணை ஆவணங்களை முடிக்க வேண்டும் என்று இங்குள்ள தொழிற் கல்வியின் முதல் நாள் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது ஏசிபி முகமட் சையித் மேற்கண்டவாறு தெரிவித்தார்.