சப்தம்ஸ் விஷன் தயாரிப்பில் ‘அன்புள்ள அப்பா’ திரைப்படம் டிவி 2இல் ஒளியேற்றம்      

0
3

கோலாலம்பூர், ஜன. 7-

அன்னையும் தந்தையும் வாழ்வில் மறக்க முடியாத, மறுக்க இயலாத பந்தங்கள். முற்றும் துறந்த பட்டினத்தாரால் கூட தாய்ப் பாசத்தைக் கைவிட முடியவில்லை. பிள்ளையை மடியில் போட்டுக் கொஞ்சும் பெற்றோர், தங்கள் உயிர் பிள்ளையின் மடியில் பிரிய வேண்டும் என எண்ணுகின்றனர். இதயத்திலும் இடுப்பிலும் சுமந்த பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு இல்லத்தில் இடமளிக்க மறுக்கும் அவலம் இன்றும் உலகில் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் பெரும் கனவுகளுடன் பிள்ளைகளை உருவாக்குகிறார் ஒரு தந்தை. பிள்ளைகளுக்காகவே உழைத்து உழைத்து ஓடாகிப் போன தாய்   தன் கணவனைத் தவிக்கவிட்டு காலமாகிறாள். ஆலம் விழுதுகள் ஆயிரம் இருந்தாலும் வேரென இருந்த மனைவியை இழந்து துயரம் அடைகிறார் அவர். தோட்டத்தை மட்டுமே நம்பியிருந்தாலும் தன் மூத்த பிள்ளைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தந்து அவன் வசதியுடன் வாழ வாழ்க்கை அமைத்து கொடுத்தார் அவர். இளம் வயதிலேயே தறிக்கெட்டுப் போன இரண்டாம் பிள்ளையையும் ஒரு மனிதனாக உருவாக்கிவைத்தார்.

தனிமரமாய் இருக்கும் அவர் துணை நாடி, பிள்ளைகளின் நிழலைத் தேடிச் செல்கிறார். அவரின் அன்புத் தாகம் தீர்ந்ததா? பிள்ளைகள் அவரின் தேவைகளை நிறைவேற்றினரா? பதில் கூற வருகிறார் “அன்புள்ள அப்பா”.

தொலைக்காட்சித் தொடர்கள், தொலைக்காட்சி படங்கள், நிகழ்ச்சிகள் என பல ஆண்டுகளாக ரசிகர்களின் ரசனைக்குப் படைப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் சப்தம்ஸ் விஷன் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது “அன்புள்ள அப்பா”. இயற்கையை கேமராவுக்குள் ஒளி ஓவியமாகக் கொண்டு வருவதில் வல்லவரான பிரான்சிஸ் சில்வன் இயக்கத்தில், சகாயம் செல்வன் தயாரிப்பில் மலர்கிறது அன்புள்ள அப்பா தொலைக்காட்சி திரைப்படம்.

கோலாலம்பூர், கோல பேராக், கூலிம், பாகான் செராய், நிபோங் திபால் என நாட்டின் பல பகுதிகளில் அன்புள்ள அப்பா படமாக்கப்பட்டிருக்கிறது. இந்திய சமூகத்தின் மூன்று தலைமுறை வாழ்க்கையை எடுத்துரைக்க தயாரிப்புக் குழு மிகுந்த உழைப்பைக் கொட்டியிருக்கிறது.

கே.எஸ். மணியம், பிரேம் ஆனந்த், கோகிலா ஆகிய பிரபலக் கலைஞர்களுடன் விஜய், சரவணன் ஆகியோர் தொலைக்காட்சித் திரையை புதிதாக நாடியிருக்கின்றனர்.

அன்புள்ள அப்பாவின் ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றது. உணர்ச்சிக் குவியலாய், கண்ணுக்கு நிறைந்த காட்சிகளாய் அன்புள்ள அப்பா,   ஜனவரி 9 ஆம் தேதி வியாழக்கிழமை டிவி இரண்டில் பிற்பகல் 3 மணிக்கு ஒளியேறவிருக்கிறது. கண்டு இன்புறத் தவறாதீர்கள்.