கோலாலம்பூர், ஜனவரி 10-

இந்திய சமுதாய வர்த்தகர்கள் தங்களது வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் அதில் வெற்றிப் பெறுவதற்கும் மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சபை (மிம்கோய்ன்) தனது முழு ஆதரவை வழங்கும் என அதன் தலைவர் டத்தோ ஹஜி சைட் ஜமாருல்கான் தெரிவித்தார்.

வர்த்தகர்கள் தங்களது வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு மிம்கோய்ன் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது. அதனை மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்துடன் இணைந்து செயல்படுத்தவிருப்பதாக அவர் கூறினார்.

வர்த்தகத்தில் சாதனைப் படைத்தவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், எஸ்எம்இ மாநாடு, கோல்டன் விருது விழாவை நடத்தவுள்ளது.

எதிர்வரும் பிப்ரவரி 15ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் பேங்க் ரக்யாட் மண்டபத்தில் 3ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த மாநாடு மற்றும் விருது விழாவை மிம்கோய்ன் ஏசான் குழுமத்துடன் இணைந்து விமரிசையாக நடத்தவிருக்கிறது. இந்த மாநாட்டில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ஹஜி சைட் தெரிவித்தார்.

இது குறித்து மிம்கோய்ன் தலைமைச் செயலாளர் ஷாகுல் ஹமிட் கூறுகையில், இந்த மாநாட்டில் ஃபுட் கிங் நிறுவன உரிமையாளர் சரத் பாபு ஏழுமலை, இயற்கை சலூன் உரிமையாளர் சி.கே.குமரவேல், விஜய் தொலைகாட்சி நீயா நானா தொகுப்பாளர் கோபிநாத் ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வர்.

இங்குப் பகிரப்படும் அனுபவங்கள் வர்த்தகர்களுக்கு ஊக்குவிப்பாகவும் எடுத்துக்காட்டகவும் இருக்கும். இதனிடையே, வர்த்தகத்தில் சாதனை படைத்த 30 வர்த்தகர்களுக்கு மிம்கோய்ன் விருது வழங்கவிருப்பதாக அவர் சொன்னார்.

எஸ்எம்இ மாநாடு, கோல்டன் விருது விழா குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மிம்கோய்ன் துணைத் தலைவர் டத்தோ முகமட் மோசின், ஏசான் குழுமத்தின் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் மைக்கியின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி.குமரராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு மற்றும் விருது விழா குறித்த மேல் விவரங்களை பெறுவதற்கு http://www.mimcoin.org/ எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.