பெட்டாலிங் ஜெயா, ஜன. 12-

ஓரின உறவு தொடர்பான ஆபாச காணொளி குறித்து, சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கை முழுமையற்றதாக உள்ளதோடு பல்வேறு கேள்விகளை அது எழுப்புவதாக பிரபல வழக்கறிஞரான முஹம்மட் ஹனிஃப் கத்ரி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஒரு முடிவு குறித்து சட்டத்துறை தலைவர் அறிக்கையை வெளியிடும்போது, அது சம்பந்தப்பட்ட விவகாரத்திற்கு தீர்வைத் தரும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த ஆபாச காணொளி தெளிவற்ற நிலையில் இருப்பதால், அதிலுள்ள நபரை அடையாளம் காண முடியவில்லை. அதனால், அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படாது என டோமி தோமஸ் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

அந்த காணொளி முதலில் வேகமாக பரவிய போது, பி.கே.ஆர். சந்துபோங் தொகுதி இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரான ஹாசிக் அசிஸ், அக்காணொளியில் உள்ளது தாம்தான் என்றும் தன்னுடன் இருப்பது பி.கே.ஆரின் துணைத்தலைவரான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி என்று ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்நிலையில், அக்காணொளியின் தெளிவற்ற தன்மையால், யார் மீதும் குற்றம் சாட்டப்படாது என கூறியுள்ள டோமி தோமஸ், ஒப்புதல் அளித்துள்ள ஹாசிக்கின் விவகாரத்தில்,  என்ன முடிவைக் கொண்டிருக்கிறார்? என முஹம்மட் ஹனிஃப் கத்ரி அப்துல்லா கேள்வியெழுப்பினார்.

ஹாசிக் குற்றவியல் அவதூறை புரிந்ததற்காக, அவர் மீது குற்றம் சாட்டலாம். காரணம், அதுவொரு குற்றச்செயல் ஆகும். அதோடு, அந்த ஆபாச காணொளியைப் பகிர்ந்தவர்கள் மீதும் அதே நடவடிக்கை முன்னெடுக்கப்பட வெண்டும் என முஹம்மட் ஹனிஃப் கத்ரி வலியுறுத்தியுள்ளார்.