கோலாலம்பூர், ஜன. 13-

புத்ராஜெயாவை நோக்கிச் செல்லும் மெக்ஸ் நெடுஞ்சாலையில் திங்கட்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய இளைஞர் மரணமடைந்தார். அதோடு உலகின் முதல் நிலை பூப்பந்து ஆட்டக்காரர் கெந்தோ மொமொதாவின் மூக்குத் தண்டு உடைந்தது.

இவர் பயணம் செய்த வேனை ஓட்டிச் சென்ற, 24 வயதுடைய பவன் நாகேஸ்வரராவ் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்தார். இச்சம்பவம் இன்று அதிகாலை சுமார் 4.40 மணிக்கு நிகழ்ந்தது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாலையில், முன்புறத்தில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த லாரியின் பின் புறத்தில் பவன் ஓட்டிச் சென்ற வேன் மோதியதாக நம்பப்படுகிறது.

இதில், வேனின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட பவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்ததகக் கூறப்பட்டது. வேனில் இருந்த ஜப்பானைச் சேர்ந்த 25 வயதுடைய கெந்தோ மொமொதாவின் மூக்குத் தண்டு உடைந்ததுடன் உதட்டிலும் காயம் ஏற்பட்டது.

வேனில் இருந்த, ஜப்பான் பூப்பந்து சங்கத்தின் மூன்று அதிகாரிகளும் உலகப் பூப்பந்து சம்மேளன அதிகாரி ஒருவரும் சொற்ப காயங்களுக்கு ஆளானதாக, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு இயக்குநர் நோர் அசாம் காமிஸ் தெரிவித்தார்.

இதனிடையே, காயமடைந்த இந்த நால்வரும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிஃ சைட் அப்துல் ரஹமான் கூறினார்.