ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பொங்கல் விழா அனைவருக்குமானது, ம.இ.கா இளைஞரணி வலியுறுத்து
சமூகம்முதன்மைச் செய்திகள்

பொங்கல் விழா அனைவருக்குமானது, ம.இ.கா இளைஞரணி வலியுறுத்து

பொங்கல் விழா ஓர் இந்து சமய பண்டிகை என்றும் அது முஸ்லிம்களுக்கு ஹராம் என்றும் மலேசிய கல்வி அமைச்சு 13.01.2020 என்று தேதியிடப்பட்ட கடிதம் வாயிலாக அறிவித்துள்ளது வருத்தம் அளிக்கிறது.

கல்வியைத் தருவித்து அதன் மூலமாகத் தெளிவை ஏற்படுத்த வேண்டிய இடத்தில் உள்ள கல்வி அமைச்சின் இந்த அறிவிப்பு ஒற்றுமையைப் போற்றும் மலேசியர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் விழா குறித்த அடிப்படை புரிதல் இல்லாமலேயே இந்தக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. காலம் காலமாகக் கொண்டாடப்பட்டு வரும் ஒரு மதச்சார்பற்ற உழவர் திருநாள்தான் பொங்கல். வாரி வழங்கும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் உணர்வோடு கொண்டாடப்படுகிறது. இதற்கு மதச்சாயம் பூசி பிரிவினை விதைப்பதை சற்றும் ஏற்றுக் கொள்ள இயலாது.

கடந்த தேசிய முண்ணனி ஆட்சியின் போது தேசிய அளவில் “ஒற்றுமை” என்ற கருப் பொருளோடு ம.இ.கா-வின் ஏற்பாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாக்களில் நாட்டின் பிரதமரும், அமைச்சர்களும் மாநில முதல்வர்களும் கலந்து கொண்டு சிறப்புச் செய்துள்ளனர். பொங்கல் அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைக்கும் தேசிய விழாவாக உருவெடுத்து வந்த சூழ்நிலையை இந்தக் கல்வி அமைச்சின் நிலைப்பாடு சீர்குலைத்துள்ளது.

கல்வி அமைச்சு உடனடியாக இந்தக் கடிதத்தை மீட்டுக் கொண்டு பள்ளிகளில் பொங்கலை அனைவரும் ஒற்றுமையோடு சேர்ந்து கொண்டாடும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று ம.இ.கா இளைஞர் பிரிவு வலியுறுத்துகிறது.

மேலும் 15.01.2020 அன்று ம.இ.கா ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான பொங்கல் கொண்டாடத்தில் பங்கு பெற்று இவ்விழா குறித்து அணுக்கமாக அறிந்து கொள்ள நம்பிக்கை கூட்டணி அமைச்சர்களை அழைக்கின்றோம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன