திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஒன்றுபட்டு விவேகமாகச் செயல்படுவோம்! – டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஒன்றுபட்டு விவேகமாகச் செயல்படுவோம்! – டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

இந்நாட்டில் தை புத்தாண்டு மற்றும் பொங்கலைக் கொண்டாடும் எல்லா மக்களுக்கும் இனிய தை புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் தனது மகிழ்ச்சியைக் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்துக் கொண்டார்.

 தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. விவேகமான உழைப்புடன், விழிப்புணர்வோடு மக்கள் ஒன்று பட்டு செயல் பட்டால், ஆண்டவன் துணையுடன் அகிலத்தையே நாம் ஆளலாம். நம் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம். கூட அதையே நமக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது. நமது ஒற்றுமையை, விழிப்புணர்வை, முன்னேற்றத்தை விரும்பாத கூட்டம், நம்மைப் பிரித்தாளப் பாடுபடுகிறது.

 நீண்ட நாட்களாகக் கண்கள் மறைக்கப்பட்ட, கரங்கள் கட்டப்பட்ட வாய் பூட்டப்பட்ட மக்களாக வாழ்ந்த மலேசியர்களுக்கு விமோசனம் அளிப்பதாக அமைந்த ஆட்சி மாற்றத்தை, மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கச் சில அழிவு சக்திகள் கடுமையாக முயன்று வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் வேறுபாட்டில், அறியாமையில் ஏக போக வாழ்ந்தவர்கள் அவர்களின் சுகபோக வாழ்வை எளிதில் இழந்திட விட மாட்டார்கள் என்பதை அறிவோம்.

 மலேசியர்களின் முதல் எதிரி அம்னோ என்பதே இந்நாட்டு எதிர்க்கட்சிகளின் நீண்ட நாளைய குற்றச்சாட்டு, அன்று அதனை ஏற்காத மக்கள், இப்பொழுது, இந்நாட்டின் உண்மையான எதிரியை அறிந்துகொள்ள அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நாட்டில் இன, சமய, மொழி ரீதியான வாதங்கள் வலுவடையவும் ஓங்கி ஒலிக்கவும் அம்னோவும், அது சார்ந்த அமைப்புகளும் முக்கியக் காரணிகளாக விளங்கி வருகின்றன.

 அது மட்டுமா? முன்னால் பிரதமர் குடும்பத்திற்காகவும் அவரைச் சார்ந்தவர்களின் நலனுக்காகத் தனது அதிகாரத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தியுள்ளார் ! நாட்டின் வளம் எப்படி எல்லாம் திருடப்பட்டுள்ளது ! அரசாங்கத்தின் ”கடன் உத்தரவாதம்” ‘என்ற போர்வையில்  நாடு எப்படியெல்லாம் சுரண்டப்பட்டுச் சூறையாடப்பட்டது எனும் திடுக் கிடும் செய்திகள் தினசரி விசாரணையின் வழி வெளிக் கொண்டு வரப்படுகிறது.

 உலக மகா பொருளாதார மோசடிக்குப் பலியான மலேசிய மக்களை, இந்நாட்டைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கியப் பொறுப்புள்ள அதிகாரிகள் முன்னால் பிரதமரைக் காப்பாற்றப் பாடுபட்டுள்ளார்கள் என்பதனை உணர்த்தும் ஒலி நாடாக்கள் சிக்கியுள்ளன.  கடந்த 60 ஆண்டுகளாக எப்படிப்பட்டவர்களிடம் நாடும், நாமும் சிக்கியுள்ளோம் என்பதனையே நமக்கு உணர்த்துகிறது.

 இன்றைய அரசுக்குத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடப்பாடு உண்டு. சில வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாமலிருக்கலாம், ஆனால் அவை தற்காலிகமான பின்னடைவேயாகும். அரசாங்கம் அதனை விரைவில் சீர்செய்யும். அண்மையில் மலேசிய மத்திய வங்கியின் அறிக்கையைக் கவனித்தால் அது விளங்கும், 2019 ம் ஆண்டின் அக்டோபர் மாதம் 15ந்தேதி முடிய நாட்டின்  அன்னியச் செலவாணி கையிருப்பு 10  ஆயிரத்து முந்நூற்று முப்பது கோடி அமெரிக்க டாலராக உயர்ந்திருப்பது நாட்டை உயர்த்த, மக்களின் நல்வாழ்வுக்கு இன்றைய அரசாங்கத்தின் அயரா உழைப்பின் வெற்றியை  பறை சாட்டுவதாக அமைந்துள்ளது.

 இதிலிருந்து  மக்கள் மீது, நாட்டின் மீது யாருக்கு அதிக அக்கறை என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கலாம் என்றார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 இந்தத் தை புத்தாண்டில் விவேகமான, விழிப்புணர்வுமிக்க ஒன்று பட்டச் சமுதாயமாக மாற நம் மக்கள் சபதம் எடுக்க வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர்கள் என்ற நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டுத் தொழில் முனைவர்களாகவும், தொழில் நுட்பவியலாளர்களாகவும், கல்விமான்களாகவும் மாற வேண்டும். அதுவே, நம் எதிர்காலச் சந்ததியின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும்.

 அதற்காக, கல்வித்துறையில் தொழில் பயிற்சிகளில் அரசாங்கம் நிறைய வாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்து வருவதால் இளைஞர்கள் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர் என்ற குறுகிய வருமானப் பிரிவிலிருந்து வெளி வந்த சமுதாயமாக நாம் மலர வேண்டும் என்றார் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான  டத்தோ  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன