ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > ம.த.எ.ச. தலைவர் இராஜேந்திரனுக்கு தமிழகத்தின் இலக்கிய விருது!
இந்தியா/ ஈழம்சமூகம்முதன்மைச் செய்திகள்

ம.த.எ.ச. தலைவர் இராஜேந்திரனுக்கு தமிழகத்தின் இலக்கிய விருது!

சென்னை, ஜன. 20-

தமிழறிஞர்கள், படைப்பாளர்கள், சேவையாளர்கள் ஆகியோருக்குச் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசு விருது வழங்கி பிறப்பித்த விழாவில் உயரிய விருதுகளில் ஒன்றை மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரி.பெ.இராஜேந்திரன் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமிருந்து பெற்றார்.

தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் 2019ஆம் ஆண்டிற்கான சித்திரைத் திங்கள் விருதுகள், தமிழ்தாய் விருதுகள், தமிழறிஞர்கள் பெயரால் வழங்கப்படும் விருதுகள், உலகத் தமிழ் சங்க விருதுகள், முதலமைச்சர் கணினித் தமிழ் விருது, மொழிபெயர்ப்பாளர்கள் விருது, என ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

அவற்றில் உலகத் தமிழ்ச்சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய விருதை மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் பெற்றார்.

ஒரு இலட்ச ரூபாய், தகுதி உரை, சான்றிதழ் ஆகியவற்றைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கெளரவித்தார்.
வானம்பாடி, தமிழ் ஓசை, மலேசிய நண்பன், மக்கள் ஓசை ஆகிய பத்திரிகைகளில் ஆதி.குமணன், ஆதி.இராஜகுமாரன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி இராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவுக்கும் தமிழகத்திற்கும் இலக்கிய உறவு பாலத்தை ஏற்படுத்தி அதனை வலுவடையச் செய்ததில் திரு.இராஜேந்திரன் ஆற்றிய பங்கு அளப்பரியது. மலேசிய தமிழ் இலக்கியவாதிகளுக்கும் இலக்கியத்திற்கும் தமிழ்நாட்டில் பரவலான அறிமுகத்திற்கும் அங்கீகாரத்திற்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தவர் இராஜேந்திரன்.

சுமார் 15 ஆண்டுகளாகத் தொடர்ந்துஅவர் மேற்கொண்டு வரும் இந்தப் பணிகளால் மலேசிய இலக்கியத்தைத் தமிழக மாணவர்கள் பயிலும் நிலை உருவாகி இருக்கிறது. தமிழகப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் மலேசிய இலக்கியங்கள் பாட நூலாக அறிமுகச் செய்யப்படுவதற்குப் பெரும் பங்காற்றி இருக்கிறார்.

இத்தகைய சேவைகளுக்கு அங்கீகாரமாகத் தமிழக அரசு இலக்கிய விருது வழங்கி கௌரவிக்கிறது. ஜனவரி மாதம் 20ஆம் தேதி தமிழகத்தின் துணை முதலமைச்சர் மாண்புமிகு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விருதுகளைச் சூட்டி சிறப்புச் செய்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன