முன்மாதிரித் தலைவர் பொன்.வேதமூர்த்தி -பேராசிரியர் முகமட் தாஜுடின் ரஸ்லி

கோலாலம்பூர், ஜன.22-

மற்றவரின் கருத்துக்கு செவிசாய்த்தல், சீர்மிகு நிர்வாகம் ஆகியவற்றில் நாட்டில் முன்மாதிரித் தலைவராகவும் அடையாளச் சின்னமாகவும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி திகழ்கிறார் என்று பேராசிரியர் முகமட் தாஜுடின் முகமட் ரஸ்லி தெரிவித்துள்ளார்.

வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டும் பக்குவம் மலேசியர்களிடம் இருந்தாலும், இந்தப் பக்குவ நிலை அண்மைக் காலமாக நலிவடைந்து வருகிறது. மற்றவரின் கருத்துக்கும் சிந்தனைக்கும் மதிப்பளிக்கும் தன்மை மங்கி வருவதால் இனம், சமயம் உள்ளிட்ட தலங்களில் அவநம்பிக்கையும் அதனால் மன அழுத்தமும் பெரும்பாலான மலேசியர்களைத் தொற்றிக் கொண்டிருக்கிறது. இதனால் மலேசியா புதை மணலை நோக்கி நகர்கிறதோ என்று எண்ணிடத் தோன்றுகிறது.

சுதந்திர மலேசியாவில் எண்ணற்ற அனுகூலங்களையும் தொழில்நுட்ப வசதிகளையும் அனுபவித்து வருகின்ற நாம், அடுத்தவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோமா?; சுயமரியாதை என்பது அனைவருக்கும் சமம் என்பதை ஏற்றுக் கொள்கிறோமா என்னும் கேள்விகளுக்கெல்லாம் நம்மிடம் பதில் இல்லை.

மொத்தத்தில் மானிட மாண்பை மதிக்கத் தவறி வருகிறோம். இதை எடுத்துச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பல்கலைக்கழக மாணவர்கள்கூட கொண்டிருப்பதில்லை. பல்கலைக்கழகப் பேராசியராகவும் மலேசிய பல்லின சமுதாயத்தில் ஓர் அங்கமாகவும் விளங்குகின்ற எனக்கு தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் நிருவாகச் சிறப்பும் மற்றவரை மதிக்கும் பண்பும் என்னை பெரு வியப்பில் ஆழ்த்தியது என்று பேராசிரியர் முகமட் தாஜுடின் தெரிவித்துள்ளார்.

ஜாவி சித்திர எழுத்துச் சிக்கல் தொடர்பாக அமைச்சரின் அலுவலகத்தில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். இந்திய – சீன அரசு சாரா அமைப்புகளின் சார்பில் அதிகமானோர் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் ஒற்றை மலாய் அரசு சாரா அமைப்பின் சார்பில் நானும் கலந்து கொண்டேன்.

அனைவரையும் பேச அனுமதித்த அமைச்சர், அவற்றை பொறுமையாக செவிமடுத்ததுடன் ஒரு செயலாளரைப் போல குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். பேசியவர்களின் கருத்து குறித்து உறுதிப்படுத்தவும் தெளிவுப்படுத்தவும் அவ்வப்பொழுது வினாக்களை மட்டும் எழுப்பிக் கொண்டிருந்த அமைச்சர், அடுத்தவரின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பாங்கை நேரில் கண்டு வியந்தேன்.

நம் பேச்சைக் குறைத்து அடுத்தவரின் கருத்தை செவிமடுத்தால் கிடைக்கும் அரசியல், சமூக, ஆன்மிக அனுகூலம் அதிகம் என்பதை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மூலம் உணர்ந்து கொண்ட நான், அந்தக் கூட்டத்தில் எதுவும் பேசவில்லை. என்னுடைய பொதுவாழ்க்கையிலும் கல்விப் பணியிலும் நான் கலந்து கொண்டு பேசாதக் கூட்டம் இது ஒன்றுதான் என்று தனியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் முகமட் தாஜுடின் குறிப்பிட்டுள்ளார்.

புத்ராஜெயாவில் ஜனவரி மாதம் 7-ஆம் நாள் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், நிறைவாக, அனைவரின் கருத்துகளையும் ஒருங்கிணைத்த அமைச்சர் மிகவும் நிபுணத்துவ முறையில் அந்தக் கூட்டத்தை முடித்து வைத்தார். தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சர்வாக் மாநிலங்களின் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் கடும் சொல்லோ அல்லது அடுத்தவரைக் காயப்படுத்தும் வாதமோ முன்வைக்கப்படவில்லை. மொத்ததில் பொன்.வேதமூர்த்தி அரசியல் இயக்கங்களுக்கு மட்டுமல்ல; சமூக அமைப்புகளுக்கும் ஒரு முன்மாதிரித் தலைவராக விளங்குகிறார்.

2020-ஆம் ஆண்டின் புதிய விடிலுக்கான சிந்தனையாக மற்றவர்களின் கண்ணியத்தைக் காப்போம் என்ற சிந்தனையுடன் முடிக்கப்பட்டுள்ள பேராசிரியர் முகமட் தாஜுடின் ரஸ்டியின் அறிக்கை, ஸ்டார் ஆங்கில நாளேடு 21-01-2020 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.