பினாங்கு, ஜன.23-

நாட்டில் ஒருமைப்பாட்டையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்துவதற்கு, இனங்களுக்கிடையிலான கலாசார நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு பள்ளி மாணவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

பல்லின கலாசார நிகழ்வுகளிலும் பண்டிகைகளிலும் பங்கேற்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளிலும் வழிமுறைகளிலும், பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் நல்லிணக்கத்தையும் நட்புறவையும் மேலோங்கச் செய்ய இயலுமென்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இனபேதமற்ற அணுகுமுறையும் சகோதரத்துவ ஒன்றுக்கூடலும், இளம் பருவத்திலேயே மாணவர் மத்தியில் விதைக்கப்பட்டால், பிளவும் பிரிவினையும் அகன்று, நாட்டில் ஐக்கியம் சங்கமிப்பது திண்ணமென்று, பினாங்கு இந்து இயக்கத் தலைவர் பி.முருகையா குறிப்பிட்டார்.

சமய விவகாரங்களை காரணமாகக் கொண்டு, பள்ளி மாணவர்களை பருவ வயதிலேயே பிளவுபடுத்தாமல் பல்லின கலாசார வைபவங்களில் அவர்களை ஒன்றிணைக்கும் வழிமுறைகளை அரசு  ஊக்குவிப்பதே,  அறிவுடமையாகுமென்று அவர் எடுத்துரைத்தார்.

அண்மையில் இங்கிருக்கும் ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளியில் நடத்தப்பட்ட, தமிழர்த் திருநாளின் உன்னதச் சிறப்பினை உணர்த்தும் பொங்கல் பண்டிகையில், பொங்கலிடும் மகிமையை பல்லின மாணவர்களுக்குப் புகட்டும் நோக்கத்தில் நடத்தப்பட்ட, ஐக்கியப் பொங்கல் நிகழ்ச்சியில் முருகையா மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

பினாங்கு இந்து இயக்கத்துடன் பள்ளி நிர்வாகத்தினரும், அதன் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் கூட்டாக ஆதரவளித்திருந்த இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன், சீனப் பள்ளி மாணவர்களும், ஜப்பானியப் பள்ளி மாணவர்களும், சர்வதேச தொடக்கப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், தமிழ் ஆர்வலர்களும், பொது மக்களும் திரளாகக் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு வருகையளித்திருந்த ஏறத்தாழ 300 மாணவர்களுக்கு வாழையிலை சைவ உணவு பரிமாறப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.புக்கிட் பெண்டேரா இந்து சங்கப் பேரவைத் தலைவர் தர்மன் இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டார்.

மாணவர் ஒற்றுமையை இளம் பிராயத்திலேயே வலுப்படுத்தும் தலையாயச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஐக்கியப் பொங்கல் நிகழ்ச்சிக்கு, நல்லாதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் முருகையா தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.