ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > இந்திரா காந்தி மகளை மீட்டெடுங்கள்! இல்லையேல் வழக்கை எதிர் கொள்ளுங்கள்! இங்காட் எச்சரிக்கை
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்திரா காந்தி மகளை மீட்டெடுங்கள்! இல்லையேல் வழக்கை எதிர் கொள்ளுங்கள்! இங்காட் எச்சரிக்கை

கோலாலம்பூர் ஜன. 28-

இந்திராகாந்தியின் மகளை அவரது முன்னாள் கணவரிடம் இருந்து மீட்டுத் தாயிடம் ஒப்படைக்கத் தவறினால் போலீஸ் படை தலைவர் மீது 10 கோடி வெள்ளி வழக்குத் தொடுக்கப்படும் என இந்திரா காந்தி அதிரடி குழு (இங்காட்) இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா குறித்து எந்த அரசாங்க பதிவும் இல்லை என்பதால் அவரின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளதாக இங்காட் தொடர்பாளர் அருண் துரைசாமி தெரிவித்தார்.

அந்தப் பெண்ணுக்கு என்ன நடந்தது? அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த வழக்கை குழந்தை காணாமல் போன வழக்காக மறு வகைப்படுத்துவது பொருத்தமாக இருக்கும். காரணம் எந்தப் பள்ளியிலும் பிரசன்னாவின் பெயர் உள்ளிட படுத்தப்படவில்லை என அருண் மேலும் கூறினார்.

குழந்தைகளுக்குச் செலுத்தப்படும் நோய்தடுப்பு மருந்து பற்றிய பதிவிலும் பிரசன்னாவின் பெயர் இடம்பெறவில்லை. அதோடு அவரின் தந்தை இந்த நாட்டை விட்டு வெளியேறியதற்கான பதிவும் இல்லை. இந்நிலையில் அவர் எங்கே இருக்கிறார் என அருண் துரைசாமி கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்துப் போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமீத் படூர் அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது இந்த வழக்கில் நல்ல முடிவை தேடி காவல்துறை பயணித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். ஆனால் பிரசன்னா கண்டுபிடிக்கப்பட்டாரா என்பதை ஹமீத் கூறவில்லை.

இன்று புக்கிட் அமான் தொடர்பு பிரிவு அதிகாரிகளைச் சந்தித்த அருண், இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு தொடுப்பதைத் தவிரத் தங்கள் அணிக்கு வேறு வழியில்லை என்றார்.

”ஒரு தாய் 11 ஆண்டுகளாகத் தன் மகளைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கிறார்.” ”இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்” என அவர் புக்கிட் அமானில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.

இதன் தொடர்பில் போலீஸ் படைத் தலைவர் விரைவில் எங்களைச் சந்திக்க வேண்டும். இந்நிலையில் அடுத்த மாதம் 10 கோடி வெள்ளியை முன் நிறுத்தி 2 வழக்கு தொடுப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன