கோலாலம்பூர், பிப்.1 – 

நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் லட்சக் கணக்கான மலேசிய வாகனமோட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி அமலுக்கு வந்துள்ளது.வெகு நாட்களாக காத்துக்கொண்டிருந்த குறைந்த டோல் சலுகையின் மூலம் இன்று முதல், 18 விழுக்காட்டு டோல் கட்டணக் கழிவை மக்கள் அனுபவிக்கத் தொடங்கலாம்.

இதன் மூலம், அரசாங்கமும் நெடிஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகளும் ஆண்டுக்கு 110 கோடி ரிங்கிட்டை சேமிக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்று பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமுலுக்கு வந்திருக்கும் 18 விழுக்காட்டுக் கட்டணக் கழிவு மூலம், 2058-ஆம் ஆண்டு வரைக்கும் மொத்தம் நான்காயிரத்து 200 கோடி ரிங்கிட்டை அரசாங்கம் சேமிக்க முடியும்.

இச்சேமிப்புப் பணம் மக்களுக்குப் பயனளிக்கும் சமூகநல மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதற்கு ஏற்ப, படிப்படியாக நிறைவேற்றுவதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருப்பதற்கு இது சிறந்த முயற்சி என்று லிம் குவாங் எங் கூறியுள்ளார்.

 

நாட்டின் 7 முக்கிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோருக்கு டோல் கட்டணங்களில் 18 விழுக்காட்டுக் கழிவை வழங்குவதென்று, கடந்த ஜனவரி 15-ஆம் தேதி நடந்த வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. புதிய டோல் கட்டணத்தின் வழி, டோல் கட்டணம், ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 13 ரிங்கிட் 60 சென்னிலிருந்து 11 ரிங்கிட் 15 சென்னுக்குக் குறைகிறது.

இது, கடந்த 1999-ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட 11 ரிங்கிட் 24 சென் டோல் கட்டணத்தைக் காட்டிலும் குறைவாகும். இது குறித்த மேல் விவரங்களை கீழ் காணும் அகப்பக்கத்தில் பெற்று கொள்ளலாம்.

https://www.plus.com.my/index.php?option=com_content&view=article&id=740:toll-fare-reduced-by-18-on-all-plus-highways-from-1st-february-2020-malaysia-s-largest-highway-network-remains-committed-to-providing-quality-maintenance-and-service-for-the-comfort-of-its-customers&catid=16:press-releases&lang=en&Itemid=154