தோ புவான் உமாவின் மறைவு ஈடுகட்ட முடியாது – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

0
24

கோலாலம்பூர், பிப்ரவரி 1-

தோ புவான் உமா துன் சம்பந்தன்  அவர்களின் மறைவு செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அவர் மறைவு இந்தியச் சமுதாயத்திற்கு மட்டுமின்றி நாட்டுக்கும் ஈடுகட்ட முடியாத இழப்பாகும். தோ புவான் மறைவுக்கு அவர் குடும்பத்தினருக்கு அனுதாபத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற நெறிமுறை நமக்கு உண்டு. இருந்தாலும், அம்மையாரை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை,  ஒரு தாயை இழந்த சோகத்தில் இந்தியச் சமுதாயம் உள்ளது என நீர்,நிலம், இயற்கைவள அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்,

நாட்டில் மலேசிய இந்தியர்கள் பிரஜாவுரிமை எடுக்க வேண்டி அலைந்த காலத்திலும், பின் தோட்டத் துண்டாடலில் பாதிக்கப்பட்ட காலம் மற்றும் இதர பல விவகாரங்களுக்காக, துன் வீ.தி  அவர்களின் உதவி நாடி,  வீடு தேடிச் சென்ற பொழுதெல்லாம், துன் அவர்கள் வீட்டில்  இல்லாவிடிலும் , வந்தவர்களை  இன்முகத்துடன் வரவேற்று, உணவும், உதவியும் வழங்கிய தோ புவான் உமா அவர்களின் நல்ல செயலை வெகுவாகப் பாராட்டிய பலரை தாம் சந்தித்திருப்பதாக அவர் சொன்னார்.

இக்கட்டான அக்காலக் கட்டத்தில் இரவு பகலாகத் துன் அவர்களின் சேவை மணக்கவும், அண்டி வந்தவர்களின் கண்ணீரைத் துடைப்பதிலும் துன் தோ புவான் அவர்கள் அறும்பாடு பட்டுள்ளார். அப்படிப்பட்ட  ஒரு தாயின் மறைவினால் மலேசிய இந்தியர்கள்  கண் கலங்கி நிற்கின்றனர், ஆறாத் துயரில் உள்ளனர், அவர்களின் குடும்பத்தாரின் சோகத்தில் அனைவரும் பங்குகொள்வோம்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்  ஒரு பெண் இருக்கிறார், என்று கேள்வி பட்டிருப்போம், அது எவ்வளவு  உண்மை என்பதைத் துன் வி.டி சம்பந்தனின் வாழ்வில்  கண்டோம்,  சுதந்திரக் காலப்  போராட்டம்  முதல்  தோட்டத் துண்டாடல்  மற்றும் துன் அவர்களின் மறைவு வரை பல சவால்களைப் போராட்டங்களைத் துன் வீ,தி யுடன் இணைந்து சந்தித்துள்ளார் தோ புவான்  அவர்கள்.

துன் வீ.தி சம்பந்தனின்  மறைவுக்குப் பின்பும், சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழாமல், துன் வீ.தி  அவர்கள் விட்டுச் சென்ற பணிகளைக் குறிப்பாகத் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தை  வெற்றிகரமான இயக்கமாக உருவாக்குவதிலும், இந்தியச் சமுதாயத்திற்கு அவர்களின்  சமய, கல்வி, மொழி, பொருளாதார மேம்பாட்டிற்கு எப்போதெல்லாம் உதவிகள், ஆலோசனைகள் தேவை பட்டதோ, அப்போது  அவர்களுக்கெல்லாம்  ஒரு தாயாக இருந்து பல வழிகளில் வழி காட்டியுள்ளார்.

அந்த அம்மையார் இந்தியச் சமுதாயத்திற்கு  ஆற்றிய சேவையைச் சமுதாயம் என்றென்றும் நினைவுகூரும். அவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.