பினாங்கு, பிப்.1 – 

2020 தைப்பூசத்தின் கொண்டாட்டங்கள் கலைக்கட்டிவிட்ட நிலையில், பக்தர்களுக்கு அன்னதானமும் பானங்களும் வழங்கும் முறையும் தொடரப்பட்டு வருகின்றன. இதில்,  பாலிஸ்ட்ரின் (POLYSTYRENE) எனப்படும் நுரைப்பத்தினால் செய்யப்பட்ட உணவுப் பாத்திரங்களை உபயோகிக்க வேண்டாம் என்ற கோரிக்கை பெரிதளவில் இவ்வாண்டும் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் விளைவிக்கும் கேடுகளைக் கருத்தில் கொண்டே இந்த வேண்டுகோள் முன் வைக்கப்பட்டுள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார். நாட்டில் தற்போது கொரொனா கிருமி பரவும் என்ற அச்சிறுத்தல் ஒரு பக்கம் தொடர்கின்ற வேளையில், ஆரோக்கியமற்ற இதன் மூலம், மறுபக்கம் விபரீதத்தை தேட்டுக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

மலேசியாவில், அதிகமான மக்கள் கூடும் தைப்பூசத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கும் பானங்கள் கொடுப்பதற்கும் நுரைப்பத்தால் செய்யப்பட்ட பாத்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன என்றார் சுப்பாராவ். பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் இந்த நுரைப்பப் பாத்திரங்கள் குப்பைக் கூளங்களாக உருவெடுக்கின்றன. நுரைப்பக் குப்பைகள் மண்ணோடு மண்ணாக மக்கி அழிந்து போவதற்கு 500 ஆண்டுகளுக்கும் மேல் பிடிக்கும் என்பதால் அந்த ஆபத்தான நிலை உருவாதற்கு நாம் காரணமாக இருந்துவிடக்கூடாது என்ற ஆலோசனை முன் வைத்துள்ளார்.

அதோடு, இந்த நுரைப்பப் பாத்திரங்கள் புற்றுநோயை வரவழைக்கும் ஸ்டைரின் என்ற இரசாயனத்தை வெளிப்படுத்துவதாகவும் வழக்கமாக நுரைப்பத் தயாரிப்பில் ஏற்படும் கோளாறுகளினால் சிறிதளவு ஸ்டைரின் எச்சங்கள் பாத்திரத்திலேயே தங்கிவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நுரைப்பம் புதியதாக இருக்கும் பட்சத்தில் அதனுள் உணவை நிரப்பும்பொழுது அதிலுள்ள இரசாயனங்கள் உணவுக்குத் இடம்பெயர்கின்றன. நுரைப்பப் பாத்திரம் பழையதாக இருந்தாலும் ஆபத்துதான். சூட்டினால் அதிலிருந்து இரசாயனங்கள் கசிகின்றன.

இப்படிப் நுரைப்பப் பாத்திரத்தில் உணவு உட்கொள்ளும்பொழுது அதில் உள்ள இரசாயனங்கள் படிப்படியாக உணவின் மூலமாக நம் உடலுக்குள் சென்று நமக்கு ஆரோக்கியக் கோளாறுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது குழந்தைகளை அதிகம் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. மலேசியாவில் சாலை விபத்துக்கு அடுத்து, அதிகமான மக்கள் இறந்துபோவது புற்றுநோயால்தான். ஒவ்வொரு வருடமும் சுமார் 40,000 பேருக்கு புற்றுநோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது என்றார் சுப்பாராவ்.

ஆகையால் மலேசியர்கள் நுரைப்பப் பாத்திரத்தை உபயோகிப்பதைக் குறைத்துக் கொள்ளும் பட்சத்தில் புற்றுநோய் ஏற்படும் பாதிப்புக்களையும் குறைத்துக்கொள்ளலாம் என்றார் சுப்பாராவ். தைப்பூசம் உன்னதமான ஒரு சமய விழாவாக இருக்கின்ற காரணத்தால், பக்தர்கள் அன்றைய நாளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே உகந்தது என்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.