TVET திட்டத்தை தேர்வு செய்யுங்கள்- அமைச்சர் குலசேகரன் வலியுறுத்து

0
22

உலு சிலாங்கூர், பிப்ரவரி 1-

தொழில்நுட்பம் நவீன வளர்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் வேளையில், மாணவர்கள் மேற்கல்வியை எந்த துறையில் தொடர்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். வருங்காலங்களில் மனிதர் இல்லாமல் எந்திரங்களால் மட்டுமே இயங்கக்கூடிய வேலைகள் வரலாம். அதற்கேற்ப நம் இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

அந்த வகையில், TVET எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்கல்வி பயிற்சி எதிர்காலத்திற்கு சிறந்த தேர்வாக அமையும் என்று அவர் வழியுறுத்தினார்.

மாணவர்கள் தங்களது பள்ளிப்படிப்பை முடித்தவுடன் பல்கலைழக படிப்பையே அதிகமாக எதிர்பார்க்கின்றனர். பல்கலைகழகங்களில் மேற்கல்வியை முடித்த பிறகும் வேலை கிடைக்காத ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால், இந்த TVET திட்டம் எதிர்காலத்திற்கு சிறந்த வழிக்காட்டலாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்பாக, நம் சமுதாயத்தில் கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் இந்த TVET திட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்வது ஏற்புடையதாக இருக்கும். அவர்களது பெற்றோர்களும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மை ஸ்கில் அறவாரியத்தில் நடைபெற்ற நம்ம வீட்டு பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பொங்கல் விழா இனம், மதங்களை கடந்து அனைவரும் கொண்டாடக்கூடிய திருநாளாகும். இதனால், பரவும் வதந்திகளையும் பொய்யான தகவல்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மை ஸ்கில் அறவாரியத்தில் தோற்றுநர் பசுபதி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பொங்கல் விழாவில் அறவாரிய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பாரம்பரிய இசை கொண்டாட்டத்தோடு, நடனக் கலைஞர்களின் மயிலாட்டம், கோலாட்டம் , கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆகிய கிராமிய படைப்புகள் ஆகியவை இடம்பெற்றன. மாணவர்களும் தங்களது படைப்புகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.