மலேசிய நாட்டின் முதல் இந்து வழிகாட்டி பினாங்கு மாநிலத்தில் அதிகாரப்பூர்வ வெளியீடு

0
18

பினாங்கு, பிப்ரவரி 7-

மலேசிய திருநாட்டின் முதல் இந்து வழிகாட்டி, பினாங்கு மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.இங்கிருக்கும் இந்து வழிபட்டுத் தலங்கள், மக்கள் பணி ஆற்றி வரும் பொது இயக்கங்கள், சமூக சேவை அடிப்படையில் வழங்கப்படும் இலவச உணவு, கல்வி, மருத்துவம், உபகரணங்கள் போன்றவற்றின் விவரங்கள் இந்த வழிகாட்டியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பினாங்கு இந்து இயக்கத்தின் பிரதான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வழிகாட்டி வெளியீடு நிகழ்ச்சிக்கு, பினாங்கு இந்து அறப்பணி வாரியம், சர்வதேச இந்து சம்மேளனம் ஆகிய அமைப்புகளுடன் இங்கு தன்னார்வ அடிப்படையில் துடிப்புடன் செயல்பட்டு வரும் பல்வேறு இந்து, தமிழ், பொது அமைப்புகளும் நல்லாதரவு வழங்கியிருந்தன.

எதிர்வரும் 7, 8 தேதிகளில் இந்துக்களால் அனுசரிக்கப்படவிருக்கும் தைப்பூசத் திருநாளின்போது, இங்கு நிர்மாணிக்கப்படுகின்ற தண்ணீர்ப் பந்தல்களின் வாயிலாக, இந்த வழிகாட்டியை பொது மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் பொருட்டு, மாநிலத்தின் சமயத் தொண்டர் பிரமானந்த சரஸ்வதி அவர்களால் இதன் 10 ஆயிரம் பிரதிகள் தயார் நிலையில் அச்சிடிப்பட்டிருப்பதாக, இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரசாந்த் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நாட்டில் இந்து சமயத்தவர் நலனுக்காக மையப்படுத்தப்பட்ட,(Centrelised) இந்து வழிகாட்டி எதுவும் இதுவரையில் இருந்ததில்லை எனவும், எளிய இந்துப் பெருமக்கள் பயன் பெறும் வகையில், இலவச சேவைகள் குறித்த எந்த வித தகவல்களும் இத்தகைய ரீதியில் இடம் பெற்றிருக்கவில்லை எனவும், பினாங்கு இந்து இயக்கத் தலைவர் பி.முருகையா குறிப்பிட்டார்.

தற்போது வெளியீடு கண்டிருக்கும் தங்களின் இந்து வழிகாட்டியில், இந்து சமயத்தவர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில், இலவச சேவைகள், பொது நலத் திட்டங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களும், அவை வழங்கப்படும் அல்லது நடைபெறுவது பற்றிய போதுமான விவரங்களும் இடம் பெற்றிருப்பதால், இது அனைவருக்கும் பயன்மிகுந்ததாக அமைந்திருப்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனவும் அவர் எடுத்துரைத்தார்.

வசதியற்ற நிலையில் வாழ்பவர்களுக்கும், அகதிகளாக அடைக்கலம் புகுபவர்களுக்கும், தங்களின் இந்த வழிகாட்டி ஒரு வரப்பிரசாதம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்று ஆணித்தரமாகக் கூறிய முருகையா,  இதனை நிகழ்நிலை (Online) ரீதியாக நிலைப்படுத்தும் திட்டத்தை, இன்னும் 6 மாத காலத்திற்குள் தாங்கள் செயல்படுத்தவிருப்பதாகவும் செய்தியாளர்களிடத்தில் புலப்படுத்தினார்.

இந்த வழிகாட்டியை உலகறியச் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் தாங்கள் ஆர்வம் காட்டியிருக்கும் அதே வேளையில், இதனுள் மேலும் பற்பல பயனுள்ள செய்திகளையும் புத்தம் புதியத் தகவல்களையும் புகுத்துவதற்கான விவேகத் திட்டங்களையும் தாங்கள் கருத்திற் கொண்டிருப்பதாக அவர் ஆதங்கம் கூறினார்.

பினாங்கில் திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வமாக நடைபெற்ற இந்த இந்து வழிகாட்டி வெளியீடு நிகழ்ச்சியில், சர்வதேச இந்து சம்மேளனத் தலைவர் பர்தீப் குமார் குக்ரேஜா, பினாங்கு இந்து அறவாரியத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன், சுவாமி பிரமானந்த சரஸ்வதி, பினாங்கு இந்து சங்கத் தலைவர் முனியாண்டி உள்ளிட்ட சிறப்புப் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.