தைப்பூசத்தன்று மது குடிக்கவும் புகை பிடிக்கவும் தடை விதிப்பீர்

0
7

பினாங்கு, பிப்ரவரி 7-

எதிர்வரும் தைப்பூசத் திருநாளில் புனிதத் தன்மையை நிலை நிறுத்திட, நாடு தழுவிய நிலையில் மது குடிக்கவும் புகை பிடிக்கவும் தடை விதிக்க வேண்டுமென்று, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல் விடுத்திருக்கிறது.

இதற்கான தடைக்கு மாநிலங்கள் ரீதியாக பதவிகளில் இருக்கும் இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள், ஆவன நடவடிக்கைகளை விரைந்து செயலாற்ற வேண்டுமென்றும் அந்த அமைப்பு கோரிக்கை எழுப்பியிருக்கிறது.

தைப்பூசத் திருவிழாவில் காவடிகள் பவனி வருகின்ற சாலைகளில் செயல்படும் உணவகங்களிலும், இடையிடையே ஏற்படுத்தப்படும் கடைகளிலும், மதுவும் புகைப் பொருள்களும் விற்பதற்கு அனுமதியளிக்கப்படுவதால், தைப்பூசத்தின் உன்னதத்திற்கு பங்கம் விளைவதாக, மது மற்றும் புகை எதிர்ப்பு இயக்கவாதியும், பினாங்கு பயனீட்டாளர் சங்கக் கல்வி அதிகாரியுமான என்.வி.சுப்பாராவ் சுட்டிக் காட்டியுள்ளார்.

மது, புகை பொருள் விற்பனைக்கான தடையை அமல்படுத்துவதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதால், அந்தந்த மாநிலங்களில்  அங்கம் வகிக்கும் இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள், இதற்கு தங்களின் முழு ஆதரவை வழங்க முன்வர வேண்டுமென்று சுப்பாராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரதமும் காவடிகளும் செல்லும் வழிகளில் இத்தகையக் கடைகள் அமைந்திருப்பதால், குடிப்பதற்கு ஏதுவான தாராளச் சூழ்நிலையில், இளைஞர்கள் மதுப் பழக்கத்திற்குள்ளாகி, தகாத செயல்களில் ஈடுபடுவதால், பற்பல சீர்கேடுகள் விளைவதாக சுப்பாராவ் குறிப்பிட்டுள்ளார்.தவிரவும், குடி போதையில் இவர்கள் அடாவடித்தனங்களிலும் வன்முறைகளிலும், ஈடுபட்டு, சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் கிளப்புவது வேதனைக்குரியது என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

பினாங்கு மாநிலத்தில் ரதம் புறப்படும் குட்டி இந்தியா பகுதியில், மலிவு மதுபானக் கடைகளும், சாராயக் குடிப்பகங்களும், அதிகமாகச் செயல்படுவதால், குடிப்பதற்குத் தூண்டும்  தாராளச் சூழ்நிலைக்கு இளைஞர்கள் ஆளாகி, தைப்பூசத்தன்று வன்முறையானச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், இதனை கவனத்திற் கொண்டு, மது விற்பனைக்கு தடையேற்படுத்துவது அவசியமென்று சுப்பாராவ் வலியுறுத்தியுள்ளார்.

தைப்பூசத் திருநாளை உத்தேசித்து சிங்கப்பூர் நாட்டு அரசாங்கம் அங்குள்ள குட்டி இந்தியா பகுதியில், மது விற்பனைக்கு முழு அளவில் தடை விதித்திருப்பதைப் போன்று,

இங்கும் அவ்வாறே தற்காலிகத் தடைச் சட்டத்திற்கு மாநில அரசுகள் பங்காற்ற வேண்டுமென்று சுப்பாராவ் விண்ணப்பம் கோரியுள்ளார்.

இதே போன்று ஏராளமான பக்தர்கள் ஒன்று திரளும் தைப்பூச தினத்தன்று, புகைப் பிடிப்பதற்கும் அரசு தடை பிறப்பிக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.புகை பிடிப்பவரைக் காட்டிலும்  அருகிலிருப்பவர்களுக்குத் தீமை அதிகமென்பதால், இதனை கருத்திற் கொண்டு, புகைப்பதற்கான தடைக்கு அரசு ஆதரவளிக்க வேண்டுமென்று சுப்பாராவ் முறையிட்டுள்ளார்.

தைப்பூசம் ஒரு சமய விழாவாக புனிதத் தன்மையுடன் அனுசரிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு, அந்நன்னாளில் நன்னெறி, ஒழுக்கம், சைவ உணவு முறை ஆகியவை கட்டாயம் கடைப் பிடிக்கப்பட வேண்டுமெனவும், இவற்றை மீறுபவர்களுக்கு எதிரான விதிமுறையும் நடவடிக்கையும் எடுக்கப்படுவது அவர்களை நல்வழிப்படுத்திட துணை புரிவது திண்ணமென்று சுப்பாராவ் எடுத்துரைத்துள்ளார்.