பினாங்கில் நகரத்தாரின் வெள்ளி இரதம் 126 ஆம் ஆண்டாக ஊர்வலம்!

0
28

பினாங்கு, பிப்ரவரி  7-

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நகரத்தார் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சார்பில், முருகப் பெருமானின் வெள்ளி ரதம், இங்கிருக்கும் பினாங்கு ஸ்திரிட் சாலையிலுள்ள கோயில் வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை 7ஆம் நாள், சரியாகக் காலை 6.30 மணிக்கு புறப்படும்்.

பிரமாதமாக அலங்கரிக்கப்பட்ட எழில் மிகுந்த வெள்ளி ரதத்தின் மீது, சிங்காரத் தோற்றத்துடன் முருகப் பெருமானின் இந்த சிறப்புமிக்க ஊர்வலம், எவ்வித மாற்றமுமின்றி வழக்காமான வீதிகளில் நடைபெறுமென்பதால் பக்தர்கள் திரளாக இந்த உன்னத வைபவத்தில் பங்கேற்பதற்கு அழைக்கப்படுவதாக, நகரத்தாரின் அறங்காவலரர்களுள் ஒருவரான வீரப்பன் சொக்கலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பினாங்கு மாநிலத்தில் தைப்பூசத் திருநாள் தொடர்பில், கடந்த 1894 ஆம் ஆண்டு செட்டியார் வம்சா வளியினரால் முதன் முதலாக நடத்தப்பட்ட இரத ஊர்வலம், 126 வது ஆண்டாக தொடர்வதாகவும், இந்த வரலாற்று சிறப்புமிக்க வைபவம் உலகளாவிய நிலையில் பிரசித்திப் பெற்றது என்று, அண்மையில் இங்கு அமைந்திருக்கும் கோயில் வீட்டில், செய்தியாளர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் வீரப்பன் விளக்கமளித்தார்.

வெள்ளி இரத ஊர்வலத்தின் போது, நகரத்தார் அணியினரின் சார்பில் ஏறத்தாழ 90 காவடிகளும் பங்கேற்குமென்று கூறிய அவர், முதல் நாள் ஊர்வலம் தொடர்பிலும், மறுநாள் தைப்பூச தினத்திலும் நகரத்தாரின் தண்ணீர்மலை தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெறுகின்ற சகல அபிஷேக நிகழ்வுகளும், சமய சடங்குகளும் திட்டமிட்டபடி வழக்கமாகவே இடம் பெறுமென்றும் உறுதிப்படுத்தினார்.

1894ஆம் ஆண்டில் தைப்பூசத்தை முன்னிட்டு, முதன் முதலாக ஊர்வலம் சென்ற இரதம், மரக் கட்டைகளால்  உருவாக்கப்பட்டதென்றும், தங்கள் வம்சா வளியினர் இந்த இரதத்தை ஒவ்வொரு தைப்பூசத்திலும் தொடர்ந்து 36 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பின்னர், இந்தோனீசிய நாட்டுக்கு அதனை தானமளித்து விட்டதையும் நினைவு கூர்ந்த வீரப்பன், இதற்குப் பிறகே வேறொரு இரதத்தை தாங்கள் வடிவமைத்ததாகவும் விவரித்தார்.

கால ஓட்டத்தில் சிறு சிறு மாறுதல்களுடன் தங்களின் இரதம் தைப்பூசத் திருவிழாவுக்கு பயன்படுத்தப்பட்ட போதிலும், அதன் பிரதான வடிவமைப்பு எவ்வித மாற்றமுமின்றி பழைய தோற்றத்திலேயே நிலை நிறுத்தப்பட்டு வருவதாகவும் தெளிவுரைத்த வீரப்பன், காளைகளைக் கொண்டு இந்த இரதத்தை இழுக்கும் பாரம்பரிய கலாசாரத்தை தாங்கள் தொடர்ந்து பேணி வருவதாகவும் குறிப்பிட்டார்.

முருகப் பெருமானின் வெள்ளி ரத ஊர்வலம்  9 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று திரும்பி, 10ஆம் நாள் திங்கட்கிழமையன்று கோயில் வீட்டை மீண்டும் வந்தடையும் போது, கேம்பல் ஸ்திரிட் சாலையின் இரு மருங்கிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென்று வீரப்பன் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டுகளில் இச்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களால், இரத ஊர்வலத்தின் போது இடையூர் நிகழ்ந்ததை நினைவு கூர்ந்து, அவர் மேற்கண்ட வேண்டுகோளை பொது மக்களுக்கு விடுத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.