ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் கலாச்சாரப் பொங்கல் விழா!
சமூகம்முதன்மைச் செய்திகள்

காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் கலாச்சாரப் பொங்கல் விழா!

வரும் 15/02/2020, சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 1.00 மணிவரை காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் மாபெரும் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பொங்கல் வைப்பதோடு, கபடி, உரி அடித்தல், கோலம் போடுதல், தோரணம்/மாவிலை கட்டுதல், பூச்சரம் தொடுத்தல், மருதாணி வரைதல், கரும்பு சாப்பிடுதல் போன்ற பாரம்பரிய போட்டிகளும் கோலாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற கலாச்சார நடனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பூச்சோங் வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற தமிழ்ப்பள்ளிகளில் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியும் ஒன்று. 635 மாணவர்கள், 35 ஆசிரியர்களுடன் இயங்கி வரும் பூச்சோங், காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி அனைத்துலக ரீதியில் நடைபெறும் Kangaroo Maths, Robotic, Asti, Ifinos, Iyia, Frim Innovation, Young Scientists என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைகளைப் படைத்து வருகிறது. ஆக கல்வி, கேள்விகளில் மட்டுமன்றி புறப்பாட நடவடிக்கைகள், புதிய உருவாக்கங்கள் என சாதனைகளைப் படைக்கும் மாணவர்களை உருவாக்கும் ஒரு வெற்றித் தளமாக காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி அமைகிறது.

தொடர்ந்து பல மாணவர்கள் இது போன்ற வெற்றிகளை அடைந்து வர, பள்ளி நிர்வாகம், பள்ளி அறவாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், மாணவர் மேம்பாட்டுக் குழு, ஆசிரியர்கள், பெற்றோர்கள், பல நல் உள்ளங்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பல முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

அண்மையில் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியின் மற்றொரு சாதனை… கல்வி அமைச்சு அறிமுகப்படுத்திய KBAT எனும் (உயர்தர சிந்தனை ஆற்றல்) தர நல பிரிவு, புறப்பாட பிரிவு, சுற்று வட்டாரத்திலும் KBAT தர மதிப்பீடு முறையை சிறப்பாக அமல்படுத்தி வருவதால், இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள், புதிய கட்டிடங்கள், புதிய தளவாடங்கள், மாணவர் நலன் என பலவகையான செலவுகளை ஈடுகட்டவே இந்த மாபெரும் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கும் அதே வேளையில் மாணவர்களின் மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்படும் இது போன்ற முயற்சிக்கு நாமும் கை கொடுப்போம். காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள், அவர்களின் பெற்றோர், உற்றார் உறவினர்கள் மட்டுமல்லாது பூச்சோங் சுற்றுவட்டார மக்களும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.  இந்த நிகழ்ச்சியினை மின்னல் பணபலை புகழ் தெய்வீகன் தாமரைச் செல்வன் வழிநடத்தவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன