திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > தாய் மொழியை உயிர்போல் நேசிப்போம்! உலகத் தாய்மொழி நாள்
உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

தாய் மொழியை உயிர்போல் நேசிப்போம்! உலகத் தாய்மொழி நாள்

உலக மக்கள் அவரவர் தாய்மொழியை நேசிக்க வேண்டும். காலமாற்றத்தால் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது அதன் உரிமையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பிப்ரவரி 21ம் தேதி உலகத் தாய்மொழி நாளாக அனுசரிக்கப்படுகிறது.

1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் நாளில், அன்றைய கிழக்குப் பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் கொண்டாட்டப்பட்டு வருகின்றது.

உலகத்தில் ஆறாயிரத்திற்கும் அதிகமான மொழிகள் இருக்கின்றன அதில் 3000 மொழிகளுக்கு மட்டுமே இலக்கணம் உண்டு. அதில் மூத்த மொழி தமிழ். செம்மொழி என்ற அங்கீகாரத்தை ஒரு மொழி பெற வேண்டுமென்றால் அடிப்படையில் எட்டு கூறுகளை அது கொண்டிருக்க வேண்டும்.

பிற மொழிகளுக்குத் தாயாக இருக்க வேண்டும். கலப்படமில்லாமல் தனித்தே செயல்பட வேண்டும். சிறப்புக் குறியீடுகளைக் கொண்டிருக்கவேண்டும் இப்படி பல உண்டு. ஆனால் மொழிக்கு எல்லாம் தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு 16 சிறப்புகள்.

பெயர், இனிமை, எளிமை, தனிமை, தொன்மை, சுழி, எழுத்து, சொல், ஒலி, கவிதை, கலை, மருத்துவம், இசை, நாடகம், இலக்கணம், இலக்கியம் என்பதாகும். இத்தனை சிறப்புகளையும் கொண்ட மூத்த மொழியான தமிழ் எப்போது தோன்றியது என்ற கேள்வி எப்போதும் எழும் என்பதை நன்கு உணர்ந்த முண்டாசுக் கவி பாரதி அன்றே எழுதினான்.

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்.

தமிழ் இலக்கியத்துக்கு இணையான இலக்கியம் இல்லை. தமிழைக் கொண்டாடிய புலவர்களைப் போல வேறு எவரும் இல்லை. தமிழை இறுதிவரை உயிர்மூச்சாக நேசித்துச் சுவாசித்தவர்களும் நமது வரலாற்றில் உண்டு.

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் முதலில் இலக்கணம் விதியாம் தொல்காப்பியம், ஐம்பெரும் காப்பியங்கள், குறுந்தொகை, நாலடியார், மூதுரை, ஆத்திச்சூடி, பக்தி மணம் வீசும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை திருவெம்பாவை இப்படித் தமிழை உரக்கக் கூறும் சான்றுகள் எம்மொழிக்கும் இல்லை என்பதே தமிழ் மொழியை உயிராய் நேசிப்பவர்களின் கர்வம்.

தமிழின் பெருமையைச் சுவாசிப்போம் தமிழை உயிர்மூச்சாய் நேசிப்போம். நமது பெருமையை நாம் அறிந்தால் மட்டுமே நமது வரலாறு தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதை உணர்வோம். அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன