நம்பிக்கைக் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் ; மிரட்டியது பெர்சத்து !

0
10

கோலாலம்பூர், பிப்.22-

ஆசிய பசிபிக் உச்சநிலை மாநாட்டிற்குப் பின்னர் பதவி விலகும் தேதியை தாமே முடிவு செய்யவிருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் தெரிவித்திருந்தாலும் , நேற்றைய நம்பிக்கைக் கூட்டணி தலைவர் மன்றம் கூட்டம் காரசாரமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் மகாதீர் புன்முறுவலுடன் காணப்பட்டாலும், கூட்டணி தலைவர்கள் மத்தியில் அதிகார பரிமாற்றம் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதாக கூட்டத்தில் கலந்துக் கொண்ட சில தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு மகாதீருக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டால், கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என பெர்சத்து கட்சி மிரட்டியதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தற்போது நம்பிக்கைக் கூட்டணி வசம் 138 இடங்களைக் கொண்டிருந்தாலும், பெர்சத்து வெளியேரறும் பட்சத்தில் அதன் எண்ணிக்கை 112 ஆக குறைய வாய்ப்புள்ளது.

அதேவேளையில் பி.கே.ஆர் கட்சியில் இருக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் மகாதீரை ஆதரிக்க முடிவெடுத்தால் மத்தியில் ஆட்சி கவிழக் கூடிய சூழல் ஏற்படும். எனினும் பெர்சத்துவின் இந்த மிரட்டலுக்கு அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு அடிப்பணியவில்லை என கூறப்படுகிறது.

ஏற்கனவே எதிர்கட்சியாக இருந்திருப்பதால் மீண்டும் எதிர்கட்சி உறுப்பினராக இருப்பது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என மாட் சாபு கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரின் இந்த கருத்துக்கு டி.ஏ.பி தலைவர்களும் ஆதரவு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இரண்டு தரப்புகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு அதிகரித்தப்போது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தலையிட்டு தீர்வு கண்டதாகவும் கூறப்படுகிறது. அதிகார பரிமாற்றம் தொடர்பில் முடிவு எடுக்கும் உரிமையை மகாதீருக்கு வழங்குவோம் என பெர்சத்து தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் கூட்டத்தில் ஆலோசனை கூறியுள்ளார்.

இதே கூட்டத்தில் தவணை முடியும் வரையில் மகாதீரே பிரதமர் பதவியில் நீடிக்கட்டும் என பி.கே.ஆர் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். நம்பிக்கைக் கூட்டணி தலைவர் மன்றம் கூட்டத்தில் சுமூகமான முடிவுகள் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், உள்ளுக்குள் புகைந்துக் கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.