கோலாலம்பூர், பிப்.22 –

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்ய தேசிய சட்டத்துறை தலைவர் அனுமதி அளித்திருந்தாலும், மலேசியாவைப் பொறுத்தவரை அந்த இயக்கம் தொடர்ந்து தீவிரவாத பட்டியலில் இடம்பெற்றிருக்கும் என உள்துறை அமைச்சர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத பட்டியலில் இடம்பெறச் செய்வதற்கு தகுந்த காரணங்கள் இருப்பதாக முகிடின் மேலும் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத பட்டியலில் இடம்பெற்றிருப்பதை உள்துறை அமைச்சு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேசிய சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ டோமி தோமிஸ் வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டது தொடர்பில் முகிடின் இவ்வாறு தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டில் நவம்பர் 12 ஆம் தேதி தொடங்கி அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை , தீவிரவாத இயக்கங்களுக்கான பட்டியலில் இடம்பெறச் செய்திருப்பதையும் அவர் சுட்டி காட்டினார்.

நாட்டின் பாதுகாப்புக்கும் பொது அமைதிக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய சித்தாந்தத்தைக் கொண்டிருப்பதால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மலேசியாவைத் தவிர, இந்தியா, கனடா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்திருப்பதையும் அவர் சுட்டி காட்டினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கும் முழு உரிமையும் உள்துறை அமைச்சர் என்ற முறையில் தமக்கு இருப்பதாக முகிடின் கூறினார். இதில் தேசிய சட்டத்துறை தலைவர் தலையிட முடியாது என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.