மத்தியில் ஆட்சி மாற்றமா ? பரபரப்பு சூழ்நிலையில் கோலாலம்பூர் !

0
12

கோலாலம்பூர், பிப்.23-

ஆசிய பசிபிக் உச்சநிலை மாநாட்டுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தேதியை அறிவிப்பேன் என துன் டாக்டர் மகாதீர் அறிவித்து 48 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் கோலாலம்பூரில் அரசியல் போர் மேகங்கள் மீண்டும் சூழத் தொடங்கியுள்ளன.

இன்று காலை பெர்சத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டம் நடைபெற்ற வேளையில், பி. கே.ஆர் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி தனது ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெட்டாலிங் ஜெயாவில் கூட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேவேளையில் சரவாக் கூட்டணி கட்சிகள் ( ஜி.பி.எஸ் ) நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோலாலம்பூரில் ரிட்ஸ் ஹாட்டலில் சரவாக் முதலமைச்சர் டத்தோ பத்திங்கி அபாங் ஜொஹாரி தலைமையில் சந்திப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அம்னோ இன்று மாலை 3.30 மணி அளவில் தனது உச்சமன்ற கூட்டத்தை தொடங்கியுள்ளது. பாஸ் கட்சியும் தனது உச்சமன்றக் கூட்டத்தை நடத்துகிறது. இவ்விரண்டுக் கட்சிகளும் நேற்றிரவு பகாங், ஜண்டா பாய்க்கில் ரகசிய சந்திப்பு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் கோலாலம்பூர் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் பரபரப்புடன் காணப்படுகின்றனர். எந்நேரத்திலும் எந்த தகவல் வரும் என்று எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மத்தியில் அமைச்சர்கள் சிலர் புத்ராஜெயாவில் தங்களுடைய அலுவலங்களைக் காலி செய்திருப்பதாக ப்ரீ மலேசியா டூடே தெரிவித்துள்ளது. மத்தியில் ஆட்சியில் மாற்றம் வரும் என பரவலாகவும் பேசப்படுகிறது.