திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 25.02.2020 என்ன நடக்கின்றது மலேசிய அரசியலில்! விரைவுச் செய்திகளின் தொகுப்பு
அரசியல்முதன்மைச் செய்திகள்

25.02.2020 என்ன நடக்கின்றது மலேசிய அரசியலில்! விரைவுச் செய்திகளின் தொகுப்பு

பெரும்பான்மை உண்டு: நாளை அறிவிப்போம்! நம்பிக்கை கூட்டணி

நம்பிக்கை கூட்டணியில் உள்ள உறுப்பு கட்சிகளின் சந்திப்பு கூட்டம் தற்போது பிகேஆர் தலைமையகத்தில் நடந்து வருகிறது. நம்பிக்கை கூட்டணியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் தளத்தில் தொடர்ந்து இணைந்திருப்போம் என்ற வாக்கியத்துடன் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

அதில் பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு, முன்னாள் துணை பிரதமர் வான் அசிஸா, டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார், குலசேகரன், கோபிந்த் சிங் ஆகியோருடன் உயர்மட்டத் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பொதுத் தேர்தலை நடத்துங்கள்! முன்னாள் பிரதமர் நஜீப் கருத்து

மக்கள் வழங்கிய அதிகாரத்தை முறையாக பயன்படுத்தாமல் ஆட்சியை இழந்து விட்டு நம்பிக்கை கூட்டணி அம்னோ கட்சியையும் பாஸ் கட்சியையும் குறை கூறக்கூடாது என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருக்கின்றார்.

கொல்லைப்புற அரசியல், முன்வாசல் அரசியல் என சர்ச்சைகளை கிளப்பி கொண்டிருக்காமல் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

மறுதேர்தல் : மஇகா வலியுறுத்து

தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலைக்கு பொதுத்தேர்தல் நடத்தப்படுவது தான் சிறப்பான ஒன்று என மலேசிய இந்திய காங்கிரஸின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை பொதுமக்களே முடிவு செய்ய வேண்டும். அதை அவர்களிடமே விட்டு விடுவதுதான் சிறந்தது என அவர் கருத்து வைத்துள்ளார்.

7.21 ஜொகூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேசிய் முன்னணி – பாஸ் கூட்டணிகள் முடிவு! ஜொகூரில் ஆட்சியை இழந்தது நம்பிக்கைக் கூட்டணி

நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்துங்கள்! – அம்னோ – பாஸ்

அம்னோ பொதுச்செயலாளர் டான் ஸ்ரீ அன்வார் மூசா சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில், டிஏபி சேர்க்கப்படவில்லை என்ற நிபந்தனையின் பேரில் டாக்டர் மகாதீர் ஒரு புதிய கூட்டணியை அமைத்தால் அவரை ஆதரிக்க அம்னோ தயாராக இருப்பதாக கூறினார்.

தேசிய முன்னணி, பாஸ் மற்றும் பிபிஆர்எஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான பார்வையாளர்களில் அவர்கள் நாடாளுமன்றத்தை கலைக்க விரும்புகிறார்கள் என்று ஒருமனதாக கூறுகிறார்கள் என்று அவர் கூறினார். “நாங்கள் மீண்டும் தேர்தலுக்குச் செல்கிறோம். மக்கள் முடிவுச் செய்யட்டும்.

 

அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார் மகாதீர் !

புத்ராஜெயா,பிப்.25-

இடைக்கால பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று புத்ராஜெயாவில் உள்ள தமது அலுவலகத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தகால பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முகிடின் யாசின், பி.கே.ஆர் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சித் தலைவர் மாட் சாபு, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, பாஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹடி அவாங், சரவா கூட்டணி கட்சித் தலைவர் டத்தோ பத்திங்கி டாக்டர் அபாங் ஹஜி அப்துல் சொஹாரி ஒப்பேங் ஆகியோரை டாக்டர் மகாதீர் சந்தித்துள்ளார்.

நாளை வாரிசான் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஷாபி அப்டாலை சந்திக்கவுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களிடம் பாரம் ஒன்று வழங்கப்பட்டது. அதில் பிரதமர் பதவிக்கான எங்களின் தேர்வை குறிப்பிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. – பெட்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ படில்லா யூசோப்

சரவா கூட்டணி கட்சி மகாதீருக்கு முழு ஆதரவு !

கோலாலம்பூர், பிப். 25-

சரவா கூட்டணி கட்சி இடைக்கால பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியில் சரவா கூட்டணி கட்சி தொடர்பில் பல்வேறு ஆருடங்கள் வெளியிடப்பட்டு வரும் வேளையில், அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அக்கூட்டணி இன்று பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டுள்ளது.

மகாதீருக்கு முழு ஆதரவு வழங்குவது தொடர்பில், மாநில முதலமைச்சரும் கூட்டணி கட்சி தலைவருமான டத்தோ பத்திங்கி அப்துல் ஜொஹாரி ஓப்பேங், கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி மாமன்னரிடம் தெரிவித்ததாக அந்த அறிக்கைக் கூறுகிறது.

அன்வாருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீறச் செய்யாதீர்கள் – பெர்சத்துவிடம் மகாதீர் வேண்டுக்கோள் !

கோலாலம்பூர், பிப்.25-

ஆசிய பசிபிக் உச்சநிலை மாநாடு,( ஏபேக்) முடிந்ததும் பி.கே.ஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்கும் தமது வாக்குறுதியை மீறுவதற்கு வழி வகுக்க வேண்டாம் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட், பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டதாக அவரின் ஊடக ஆலோசகர் டத்தோ காடிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

இன்று காலை பிரதமரை சந்தித்த காடிர் ஜாசின் இது குறித்து தமது வலைப்பதிவில் எழுதியுள்ளார். பெர்சத்து உச்சமன்றம் தம்முடைய கருத்துகளைக் கேட்பதைக் காட்டிலும் தமது அரசியல் செயலாளரின் பேச்சைக் கேட்பதால் மகாதீர் அதிருப்தி அடைந்துள்ளார். பெர்சத்து கட்சியில் இருந்து அவர் விலகுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும் என காடிர் ஜாசின் கூறினார்.

பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை இடைக்கால பிரதமர் அறிவிப்பார் – லிம் குவான் எங் !

கோலாலம்பூர், பிப்.25-

கோவிட் 19 நோய் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்ய அரசாங்கம் பொருளாதர ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்க திட்டமிட்டிருந்தது,. எனினும் பாக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் கவிழ்ந்ததை அடுத்து , இந்த ஊக்குவிப்பு திட்டத்தை இடைக்கால பிரத்மர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் அறிவிப்பார் என நிதித்துறை முன்னாள் அமைச்சர் லிம் குவாங் எங் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இன்று காலை தாம் பிரதமரை புத்ராஜெயாவில் சந்தித்ததாக குவான் எங் மேலும் தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் இறுதி அறிக்கையை தாம் தயார் செய்து விட்டதாக குவான் எங் கூறினார். எனினும் நேற்றைய தினம் பிரதமரின் பதவி விலகலைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் பதவி இழந்ததால், துன் மகாதீரை பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிப்பார் என குவான் எங் கூறினார்.

பொறுமைக் கொள்ளுங்கள் – மக்களுக்கு மாமன்னர் ஆலோசனை !

கோலாலம்பூர், பிப்.25-

நாட்டின் அரசியல் நெருக்கடி தீரும் வரை மக்கள் பொறுமைக் காக்க வேண்டும் என மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டின் தலைவர் என்ற முறையில் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண தமக்கு போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாமன்னரை சந்தித்த அம்னோ தலைவர்கள்

மாமன்னரை சந்திக்க பேருந்தில் இஸ்தானா நெகாரா சென்றனர் அம்னோ & பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இன்று முதல் கட்டமாக மாமன்னர் அம்னோ, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் வேளையில் நாளை நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன