கோலாலம்பூர், பிப். 28-

நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தவர்களை நீக்கிவிட்டு நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தைத் தொடர்ந்து இருக்கலாம் என பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும் நீர் நிலம் இயற்கை வள அமைச்சின் முன்னாள் அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியிருக்கின்றார்.

இதனிடையே பொதுத் தேர்தலை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் பெர்சத்து கட்சி முழுமையாக அழிந்து வடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அக்கட்சி தற்போது மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளது. நடப்புச் சூழல் தேர்தலுக்கு வழிவகுக்கும் பட்சத்தில் அக்கட்சி மிகப்பெரிய பின்னடைவையும் இழப்பையும் சந்திக்கும் எனத் தாம் நம்புவதாக அவர் கூறினார்.

நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்ட 5 அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்துவிட்டு அப்பதவிக்கு மற்றவரை நியமித்து வழக்கம்போல அரசாங்கத்தை நடத்தி இருக்க வேண்டும்.

இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இருந்தால் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தொடர்ந்து நிலைத்திருக்கும். கொல்லைப்புறமாக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற சதித் திட்டத்திற்கு மகாதீரும் துணை புரிந்திருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பிரதமர் பதவியைத் துன் டாக்டர் மகாதீர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் வாக்குறுதி அளித்தபடி ஒப்படைத்திருந்தார் இந்த இக்கட்டான சூழ்நிலை உருவாகி இருக்காது என்றும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தனத அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் துன் டாக்டர் மகாதீர் தலைமையில் நம்பிக்கை கூட்டணியை மீண்டும் அமைக்க வேண்டும் என்ற முயற்சிகள் தொடர்ந்து நடந்தன என்பதையும் சேவியர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனால் அதற்கு அவர் செவிசாய்க்கவில்லை. மாறாக ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதில் உறுதியாக இருந்தார். அனைத்து அதிகாரத்தையும் பெற்ற பிரதமராகத் தாம் பதவி வகிக்க வேண்டும் என்பதுதான் அவரின் குறிக்கோளாக இருந்தது எமன அவர் சுட்டிக் காட்டினார்.

இத்தருணத்தில் தான் பிரதமர் வேட்பாளராக டத்தோஸ்ரீ அன்வாரின் பெயர் முன்மொழியப்பட்டது. அனைவரும் அதற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர் என சேவியர் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரை நாட்டிற்காக, மக்களுக்காக மக்களால் தேர்நதெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கமே ஆட்சி நடத்த வேண்டும்.

தற்போது அனைவருமே மாமன்னரின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். ஆனால் நாடாளுமன்ற தொடர் கூட்டப்பட வேண்டும் என துன் டாக்டர் மகாதீர் அறிவித்திருப்பதும் ஏன் என்ற கேள்வியை முன் எழுப்புகின்றது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தவர்களை நீக்காமல் அரசாங்கத்தைச் சரிவில் தள்ளி விட்டு நாட்டைக் காப்பாற்ற விரும்புவதாக அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது எனக் கோலா லாங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.