மலேசியாவில் அவசர-அவசரமாக மேற்கொள்ளப்பட்ட பொது நடமாட்டக் கட்டுப்பாடு பற்பல வகைகளில் மக்களுக்கு அசௌகரியத்தை வழங்கி விட்டது. பதவி போராட்டத்தில் நாட்டு நலனைப் புறந்தள்ளியதால் ஏற்பட்டு விட்ட விபரீதங்களின் தாக்கதைப் போக்கச் சிந்தனையின்றி எடுத்த நடவடிக்கையால் மக்கள் மேலும் துன்பங்களுக்கும், நாடு பெரிய பொருளாதார இழப்புகளும் அடைய வழியமைத்து விட்டதைக் காண வருத்தமளிக்கிறது,

ஆனால், இந்த இக்கட்டான நேரத்தில் மலேசிய மக்கள் பொறுப்புள்ளவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தப் பொறுமையுடன் செயல்பட வேண்டும். தான் ஸ்ரீ மொகிதீனின் பக்காத்தான் நேஷனல் அரசாங்கம் மேற்கொண்ட அவசர முடிவுக்கு, அது கூடிய விரைவில் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் நிலை வரலாம் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

உலகம் கொரோன வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டு, அதன் பொருளாதாரத் தாக்கத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றவும், நோய் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் பல திட்டங்களைத் தீட்டி அமல்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், ஆட்சி கவிழ்ப்பை மேற்கொண்டவர்களின் செயலால், மக்கள் வஞ்சிக்கப்பட்டு விட்டனர். இந்நாட்டு மக்களின் அர்ப்பணிப்பும் பக்காத்தான் ஹராப்பான் அரசின் கடந்த இரண்டு ஆண்டுகால உழைப்பும் கூடப் பாழாகி விட்டது.

சீனாவில் கொரோனா வைரஸ் பீடிப்பு ஏற்பட்ட நாளிலிருந்து சுமார் 2 மாதங்கள் பல்வேறு வகையான போராட்டங்களின் வழி அந்நோய் பீடிப்பை 25 நோயாளிகள் என்ற கட்டுப்பாட்டில் பக்காத்தான் ஹராப்பான் அரசு வைத்திருந்ததை அனைவரும் அறிவர். ஆனால் அந்த எண்ணிக்கை இன்று ஓர் ஆயிரத்தை நோக்கி வேகமாகப் பரவி வருவது அபாயகரமான எச்சரிக்கையாகும்.

அகதிகளைப் போன்று அன்னிய வானூர்தி நிலையங்களில் மலேசியர்கள்

மேலும் மிகவும் கவனமாகத் திட்டுமிட்டு எடுக்கப்பட வேண்டிய ” பொது மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடுகள்” கூட ஒழுங்கான திட்டமிடலின்றிச் செயல் படுத்தப்பட்டதால். மக்கள் பல்வேறு விதமான தொல்லைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு வருகின்றனர். அரசாங்கத்தின் இப்படிப்பட்ட செயலால் மலேசிய மக்கள் உலகம் முழுவதிலும் பல வானூர்தி நிலையங்களில் தஞ்சம் புக வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சிந்தனையற்ற செயலால், பொருளாதாரம், கல்வி, மருத்துவம், சுற்றுப்பயணம் என்ற பல்வேறு துறை சார்த்த மலேசியர்கள் மேற்கொண்டிருந்த வெளி நாட்டு பயணங்கள் தடைபட்டுள்ளது. அதனால், நம் மக்கள் கௌரவத்தை இழந்து, அகதிகளைப் போன்று அன்னிய நாடுகளின் வானூர்தி நிலையங்களில் அடுத்தவர் கருணைக்குக் காத்திருக்கச் செய்துள்ளது. அரசாங்கத்தின் தொலை நோக்கற்ற, பொறுப்பற்ற செயலாகும்.

இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசாங்கமே மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள இந்த அசௌகரியத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். அனைத்து மலேசியர்களும் விரைவில் வீடு திரும்பும் செலவை ஏற்று கூடிய விரைவில் அவரவர் குடும்பத்துடன் அவர்கள் ஒன்று சேர அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

அதே வேளையில் இந்தத் தொற்று நோயைக் குறிப்பிட்ட வட்டத்துக்குள் கட்டுப்படுத்துவதை விட்டு நாடு தழுவிய அளவில் பரவுவதற்கு அரசாங்கம் காரணமாகி விட்டதைக் கண்டு வியப்படைகிறோம். பொது நடமாட்டக் கட்டுப்பாட்டிற்குத் தேவையான முறையான கட்டுப்பாட்டு விதிகளையும், வழிகாட்டிகளையும் மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பக்காத்தான் நேஷனல் அரசாங்கம் முன் கூட்டியே விளக்கியிருந்தால் இந்த விபரீதம் நடந்திருக்காது.

ஒரு பொறுப்பற்ற பொது நடமாட்டக் கட்டுப்பாடு என்ற அறிவிப்புடன் கூடிய ஓய்வை, நீண்ட விடுமுறையாகக் கருதிக் கொரோனா நச்சுநுண்மி தொற்றிய ஒருவர் தான் வசித்த இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் அந்த நச்சுநுண்மியை கொண்டு செல்ல அரசாங்கமே வழி வகுத்து விட்டது. அதனால், நாடு ஒரு பெரிய அபாயத்தில் சிக்கி விட்டது.
நாடு அதிலிருந்து விடு பட வேண்டும் என்று வேண்டுவோம், முடிந்த வரை அவரவர் வீடுகளில் இருப்பதை அனைவரும் உறுதிப்படுத்துவோம். நாமும் நமது குடும்பத்தாரும், சுகாதாரமான வாழ்க்கை முறைக்கு முக்கியம் அளிப்போம் என்று கேட்டுக் கொண்டார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்