COVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி!!

COVID 19 என்று அழைக்கப்படும் கொரோனா நச்சுயிரி இன்று உலக மக்கள் அனைவருக்கும் பெரும் மருட்டலாக உருவெடுத்துள்ளது. கிட்டதட்ட 190 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா நச்சுயிரியைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் நம் நாட்டில் கடந்த 18- மார்ச் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

பலதரப்பட்ட சமூகங்களுக்கு மத்தியில் தொடர்ந்து இயங்கி வருவதன் அடிப்படையில், குறைந்த வருமானம் பெறும் மற்றும் தினசரி வருமானத்திற்காக உழைக்கும் B40 தரப்பினர், முதியவர்கள், இப்பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்த பணியாற்றும் முன்வரிசை பணியாளர்கள், முறையான ஆவணங்கள் உடைய அல்லது ஆவணங்கள் இல்லாத மலேசியாவில் உள்ள வெளிநாட்டினர் மற்றும் பட்டியலிடப்படாத பிற பாதிக்கப்பட்ட குழுவினர் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் அதிகம் பாதிக்கப்படுவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனவே, மலேசியாவில் உள்ள 21 தன்னார்வ சமூக அமைப்புகளின் ஒருங்கிணைப்பின் உருவான கோவிட் -19 சமூக ஆதரவு குழுவினரால், இதன் தாக்கத்தினால் எதிர்பாரா சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் B40 தரப்பினருக்கு உதவுவற்காக COVIDCAREMY உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி மற்ற நிதி பங்காளிகளுடன் இணைந்து டிரா மலேசியா மற்றும் MySkills அறவாரியத்தால் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த உதவித் திட்டத்தின் கீழ், உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்குதல், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் வாங்க உதவுதல், கோவிட் – 19 தொற்றுநோய் குறித்த ஐயங்கள், அண்மைய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ள தொலைபேசி சேவை, பிற அவசர தேவைகளுக்கான உதவிகள் ஆகிய 4 வகையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் தொடங்கப்பட்ட COVIDCAREMY உதவித் திட்டத்திற்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைப்பேசி அழைப்புகள் பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு அழைப்பும் முறையாக பதிவு செய்யப்பட்டு அழைப்பாளர்களின் விபரங்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. இன மத பேதமின்றி, மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தயர்கள், பூர்வக்குடியினர், அகதிகள், அந்நிய தொழிலாளர்கள், மருத்துமனை பணியாளர்கள் என அனைவரையும் COVIDCAREMY உதவித் திட்டம் சென்றடைந்துள்ளது. இன்று 27 மார்ச் வரை, 3288 பேர் இந்த உதவித்திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர்.

பெரும்பாலும் உணவு மற்றும் மளிகைப் பொருள் உதவியினைப் பெற்றுக் கொண்டவர்கள் சில நாள்களுக்குத் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் அடிப்படையான உணவினை உண்ணலாம் என நன்றி தெரிவித்துக் கொண்டனர். சிறு குழந்தைகளையும் முதியவர்களையும் நோயாளிகளையும் மாற்றுத் திறனாளிகளையும் கொண்ட குடும்பத்தினர் எங்களின் உதவியானது தக்க நேரத்தில் தங்களை வந்தடைந்திருப்பதாகவும் இல்லையென்றால் முறையாக உணவின்றி தாங்கள் தவிக்க வேண்டியிருந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வருகிற ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து உதவி வேண்டுவோர் கீழ்க்காணும் எண்களுக்குக் காலை ஒன்பது தொடங்கி மாலை 6.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

COVIDCAREMY உதவித் திட்ட செயலகத்தின் தன்னார்வாளர்கள் மோனா 017-7803054, லீ 017-8526083, ஜாஸ்லின் நடியா 011-28927518, சுகு 012-2058703, இரகு பாலன் 016-4271905 , முகமட் பியாஸ் 018-5734331 , தேவா 012-3465212, வைஜந்தி ‭012-9063073‬, சிவப்பிரியா ‭010-2732981‬ மற்றும் மாலதி ‭013-338 3036‬ ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து உதவி கோருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்னும் அதிகமான மக்களைச் சென்றடைவதற்குப் பொது அமைப்புகளிடம் இருந்தும் பொது மக்களிடம் இருந்தும் உதவிகள் வரவேற்கப்படுகின்றன. உதவிகள் வழங்க விரும்புவோர் 012-2058703, 017-7803054 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் வழங்கும் ஒவ்வொரு சென்னும் தேவைப்படும் மக்களுக்கான உணவுப் பொருள்களாகவும், மருந்துகளாகவும், அவர்களின் சுமையைக் குறைப்பதற்கான சேவைகளாகவும் சென்று சேரும் என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here