குணமடைந்தவர்களை மீண்டும் தாக்கும் கொரோனா!

சியோல், ஏப். 15-

தென்கொரியாவில் கோவிட்-19 சிகிச்சையில் குணமடைந்த 116 பேருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக கோவிட்-19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா இருந்தது. எனினும் அந்த நாடு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அத்தொற்று நோயைக் கட்டுப்படுத்தியது.

தற்போது அங்கு இத்தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. அதன்படி தென்கொரியாவில் கோவிட-19 தாக்குதலுக்கு ஆளான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் சுமார் 7,500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், அங்கு குணமடைந்த 116 பேருக்கு மீண்டும் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தென்கொரியா நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையங்களின் இயக்குந்ர் ஜியோங் யூன்கியோங் கூறுகையில், “கோவிட்ல்-19 தொற்றிலிருந்து விடுபட்டவர்கள் முழுமையாக குணமடையாமல் இருந்திருக்கலாம். அதனால் அவர்களது உடலில் மீண்டும் அந்தக் கிருமி செயல்பட தொடங்கியிருக்கும். இதுபற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறோம்” எனக் கூறினார்.

வைரசின் எச்சம், நோயாளிகளின் உடம்பில் இருந்து வெளியேறாமல் உள்ளேயே இருந்ததால், அவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தென்கொரிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here