வசதி குறைந்த இந்தியர்களுக்கு உணவுப் பொருட்கள் உதவி : எம்.ஏ.பி கட்சி தஞ்சோங் மாலிம் தொகுதியும் ஹிண்ட்ராஃப்பும் வழங்கியது

சிலிம் ரிவர், ஏப். 28-

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்தில் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியில் செயல்பட்டு வரும் மலேசிய முன்னேற்றக் கட்சியும் அதே தொகுதியைச் சேர்ந்த ஹிண்ட்ராஃப்பும் இணைந்து வசதி குறைந்த இந்தியர்களுக்கு உணவுப் பொருட்கள் உதவியை வழங்கியது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடந்த மார்ச் 18ஆம் நாள் தொடங்கியது முதல் இன்று வரை சிறுக சிறுக எங்களால் முடிந்த உதவியை இந்திய மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறோம். இது நாள் வரையில் 128 குடும்பங்களுக்கு இந்த உதவியை வழங்கி வருவதாக மலேசிய முன்னேற்றக் கட்சியின் தஞ்சோங் மாலிம் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் நவனீத் பிரபாகரன் தெரிவித்தார்.

உறவினர்கள், நண்பர்கள் ஒத்துழைப்போடு இந்த உதவியைச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட நவனீத், தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த இந்திய மக்களுக்கு இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்தில் அடிப்படைத் தேவைக்கான உதவிகள் வழங்கப்படுவது மிகக் குறைவு என சுட்டிக் காட்டினார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வருவதோடு எல்லோருக்கும் இது போன்ற உதவியைச் செய்ய இயலவில்லை என்றாலும் தங்களால் முடிந்ததைத் தேவையானோருக்குத் தேடிப் போய் செய்ய முற்படுவதாக தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி ஹிண்ட்ராஃப்பின் ஒருங்கிணைப்பாளருமான நவனீத் குறிப்பிட்டார்.

அதே வேளையின், இந்த முன்னெடுப்புக்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மலேசிய முன்னேற்றக் கட்சியின் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி சார்பாகவும் ஹிண்ட்ராஃப் தஞ்சோங் மாலிம் சார்பாகவும் அவர் தனது நன்றியைப் புலப்படுத்தினார்.