அடுத்த கட்ட சவாலை எதிர்கொள்ள தயாராக வேண்டும்! டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் தொழிலாளர் தின வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்.30-

கொரோனா தொற்றுக் கிருமி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள விளைவினால் தொழிலாளர்கள் அடுத்த கட்ட சவாலை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ம.இ.கா தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது தொழிலாளர் தின வாழ்த்து செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கோவிட் 19 நோய்த் தொற்று யாரும் எதிர்பாராத ஒன்று. இந்த நோய்த் தொற்றுப் பரவல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நோய்த் தொற்றை முற்றாக துடைத்தொழிக்க பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அரும்பாடுப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு அனைவரும் குறிப்பாக தொழிலாளர்கள் பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும் என்று மலேசிய மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

இந்த கோவிட் 19 நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட பிறகு அது ஏற்படுத்தியுள்ள பல சவால்களை சந்திக்க பலரும் குறிப்பாக தொழிலாளர்கள் அனைவரும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த நோய்த் தொற்றினால் பல தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை தொழிலாளர்கள் அனைவரும் முறையாக திட்டமிட்டு தீர்வு காண வேண்டும் என்று தொழிலாளர் தின செய்தியில் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக் கிருமியை முற்றாக ஒழிக்க அனைவரும் வீட்டில் இருந்து விட்டாலே நாம் தொற்றுப் பரவலை தடுத்து அதிலிருந்து விடுபட முடியும். இந்த கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு நாம் பல ரீதியில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய எதிர்எதிர்கால சவால்களை சமாளிக்க தொழிலாளர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தொழிலாளர்கள் அனைவருக்கும் தமது தொழிலாளர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.