கப்பாளா பத்தாஸ், மே.1 –
கோவிட் 19 தொற்றின் காரணமாக உலகமே முடங்கியிருக்கும் நிலையில், பல குடும்பங்கள் இன்றும் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர். குறிப்பாக மலேசியாவில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதில் இருந்து, குறைந்த வருமானம் பெறும், பி40 பிரிவைச் சேர்ந்த பல குடும்பங்கள் தங்களின் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பல சவால்களை சந்தித்து வருகின்றனர்.
இத்தகைய குடும்பங்களின் நிலையைப் புரிந்துக் கொண்டு பல்வேறு அரசாங்க சார்பற்ற இயக்கங்கள் உதவி வரும் வேளையில், பினாங்கு கப்பாளா பத்தாசில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வரும் , கப்பாளா பத்தாஸ் மைபிபிபி கட்சியும், கப்பாளா பத்தாஸ் இந்தியர் முன்னேற்ற இயக்கமும், 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கி உதவியுள்ளது. கப்பாளா பத்தாசில் ஈராயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கும் நிலையில் தங்களால் முடிந்த வரையில் உதவிகளை வழங்கிட முயன்று வருவதாக கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதித் தலைவரும், கப்பாளா பத்தாஸ் இந்தியர் முன்னேற்ற இயக்கத்தின் தலைவருமான மு. வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ரீசால் மெரிக்கான், பெர்த்தாம் சட்டமன்ற உறுப்பினர் காலிக் மெத்தாப், பெனாகா சட்டமன்ற உறுப்பினர் முஹமட் ஹுஸ்னி மாட் பியா, பெர்த்தாம் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் டத்தோ ஷரிபூல், மலேசிய இந்து தர்ம மாமன்றம் என பல்வேறு தரப்பினர் வழங்கிய ஆதரவின் அடிப்படையில் அங்குள்ள இந்தியர்களுக்கு உதவிகளை வழங்க முடிந்ததாக வேலாயுதம் அனேகனிடம் தெரிவித்தார்.
இவைத் தவிர தமது சொந்த செலவில் 60-க்கும் அதிகமான குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்திருப்பதாக வேலாயுதம் மேலும் கூறினார். கோவிட் 19 தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு நிலை வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையில் மனித நேயம் காப்பது அனைவரின் கடமையாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு பகுதியிலும் அங்குள்ள அரசியல்வாதிகள் உதவிகள் வழங்கிடும் அதே நேரத்தில் அரசு சார்பற்ற இயக்கங்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க முன் வரவேண்டும் என அவர் கேட்டு கொண்டார். கப்பாளா பத்தாசில் தொடர்ந்து உதவிகளை வழங்கிட தமது இயக்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.