டிரா மலேசியா தொழிலாளர் நாள் 2020! சரவணன் சின்னப்பன்

இவ்வாண்டின் தொழிலாளர் நாள் கொண்டாட்டம் பொருள் பொதிந்த ஒன்றாக உள்ளது. நாட்டிலுள்ள நம்முடைய 15.8 மில்லியன் தொழிலாளர்களோடு சேர்த்து உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார பங்களிப்புகளை நாம் கொண்டாடும் இவ்வேளையில், தொழிலாளர் சந்தையில் COVID-19 நெருக்கடியின் பாதகமான விளைவுகளைச் சமாளிப்பதற்கான அவர்களின் அவலத்தையும் போராட்டத்தையும் நாங்கள் உணர்ந்துள்ளோம்.

மலேசியாவின் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டிற்குத் தொழிலாளர்களே முதுகெலும்பாக விளங்குகின்றனர். பல ஆண்டுகளாக, தோட்டங்கள், சேவைத் துறைகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் உட்பட அனைத்து பொருளாதாரத் துறைகளிலிருந்தும் தொழிலாளர்கள் நமது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

தொழிலாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்தன் வாயிலாகவே நாம் நீண்ட தூரம் வந்துள்ளோம் ; இரயில்வே தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஊதிய முறைமை, வீட்டுக் கடன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதிய நன்மைகள் என பொதுச் சேவைக்கான குறைந்தபட்ச ஊதியங்கள் மற்றும் சேவை மேம்பாடுகளை அண்மையில் மறுஆய்வு செய்வதன் மூலம் இது தெளிவாகிறது.

எவ்வாறாயினும், நமது மனித வளத்தைப் பாதுகாப்பதிலும் பலப்படுத்துவதிலும் நாம் இன்னும் அடைய வேண்டியவை ஏராளம் உள்ளது. உலகின் பிற பகுதிகளில் உள்ள மனித வளத்தில் ஆக்கரமான பங்களிப்பை வழங்குபவர்களாக விளங்கும் பெண்கள், நமது மனித வளத்திற்கு குறைவான பங்களிப்பினை வழங்குபவர்களாக உள்ளனர்.

மலேசியாவின் புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள மனித வள ஆய்வு அறிக்கை 2018-இன் படி, மலேசியாவில் 2018-ஆம் ஆண்டிற்கான பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 55.2 விழுக்காடாக இருந்த நிலையில் ஆண்களின் பங்கேற்பு 80.4 விழுக்காடாக இருந்தது.

மலேசியா உயர் வருமானம் பெறும் நாடு எனும் நிலையை அடைய விரும்புவதால், நம் நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் பின் தள்ளப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த 11-வது மலேசியா திட்டத்தின் கீழ் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளபடி, 2020 -க்குள் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை 5 விழுக்காட்டிலிருந்து 59 விழுக்காடாக உயர்த்துவதற்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் பின்பற்ற வேண்டியது அவசியம்.

உண்மையில், மலேசியாவில் உள்ள தொழிலாளர்கள் COVID-19 பெருந்தொற்று பரவலாலும் அதன் விளைவாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்நெருக்கடியானது வெவ்வேறான பிரிவினைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மாறுபட்ட விளைவினைக் கொண்டு வந்துள்ளது.

எங்கள் மனித வளத்தின் குறிப்பிட்ட பிரிவுகள், குறிப்பாக நிரந்தமற்ற வேலைகளின் மூலம் நாள் சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் வேலைத் தேடி வெளியே செல்ல முடியாமல் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடுகின்ற நிலையை உருவாக்கியுள்ளது.

அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையிலிருந்து அவர்களை மீட்டு நிலையான வருமானத்தைப் பெறுவதற்கு அவர்களுக்கு ஆதரவளிக்க போதுமான நடவடிக்கைகள் இல்லாத நிலையில் அவர்கள் வறுமையில் வீழும் அபாயத்தில் உள்ளனர்.

தற்போது வெளிநாட்டு தொழிலாளர்களால் நிரப்பப்பட்டு வரும் தொழிலாளர் சந்தையின் தேவை மற்றும் வேலைவாய்ப்பின் இடைவெளியை நிரப்புவதற்கு, அதிக உள்ளூர் தொழிலாளர்களை ஊக்குவிக்க சிறந்த ஊதியம் மற்றும் ஊக்கத்தொகைகளை வகுப்பதில் மேலும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை.

இத்தகைய நடவடிக்கை குறைந்த திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாடு சார்ந்திருப்பதைக் குறைக்கும் அதே வேளையில் உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்புகள் நிலையான முறையில் உருவாக்கப்படுவதை உறுதி செய்யும். COVID-1-ஐ எதிர்த்துப் போராடுவதிலும், COVID-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு காலக்கட்டத்திற்குப் பிறகு நம் நாட்டை மேம்படுத்துவதிலும் தொழிலாளர்கள் தொடர்ந்து ஒரு முக்கிய பங்கை வகிப்பார்கள். இந்த நெருக்கடிலிருந்து மீண்டு வர ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளதன் அடிப்படையில் தொழிலாளர்களைக் கொண்டாடும் அதே வேளையில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தகுந்த பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் வழங்குவதை உறுதிசெய்வோம்.

மலேசியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காரணமாக வருமானம் இழந்துள்ள தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு DHRRA மலேசியா, COVIDCAREMY திட்டம் மூலம் தனது ஆதரவை வழங்குகிறது. அவசர உதவிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அதன் தொலைப்பேசி உதவி சேவையின் வழி (017-7803054-ஐ அழைக்கவும் அல்லது 012-2058703 வாட்ஸ்அப் மட்டும்) பொதுமக்கள் ஆலோசனைகளைப் பெறலாம். இந்த தொழிலாளர் நாளில், யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதை நினைவில் கொள்வோம்.

சரவணன் எம். சின்னப்பன்
தலைவர், டிரா மலேசியா
0125267923, [email protected]
https://www.facebook.com/COVIDCAREMY