முகப்பு > சிறப்புச் செய்திகள் > உலக பிரபலங்களில் மறக்க முடியாதவர் இளவரசி டயானா!
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உலக பிரபலங்களில் மறக்க முடியாதவர் இளவரசி டயானா!

இளவரசி டயானாவின் 20-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. உலகின் தவிர்க்க முடியாத கனவு நாயகி டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர். இவர் ஜூலை 1, 1961ஆம் ஆண்டு பிறந்தார். வேல்ஸ் இளவரசர் சார்லஸின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹேரி). இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் முதல் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். அதுவரை இங்கிலாந்து மக்கள் பார்த்து வந்த அரச குடும்பத்து மனிதர்கள் வேறு. இறுக்கமான முகம். நீ சாமான்யன், நாங்கள் ராஜவம்சத்தினர்..! என்கிற தோரணை. நிலப்பிரபுத்துவ மனோபாவம். தங்க வட்டத்துக்குள் ராஜ வாழ்க்கை. அந்தக் குடும்பத்துக்கு உள்ளே நுழையும்போதே, நான் வேறு ஜாதி என்று நிரூபித்துவிட்டவர் டயானா. பத்தொன்பது வயதில் சார்லஸைக் கைப்பிடித்து பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்தார். வெகு சீக்கிரம், அடித்தட்டு மக்களின் இதயத்தில் இடம்பிடித்துவிட்டார்.

உலகத் தொழு நோயாளிகள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருமே டயானாவுக்கு சிநேகிதமானார்கள். எய்ட்ஸ் நோயாளிகளைத் தொட்டுப் பேசுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை உலகுக்கு முதன் முதலில் எடுத்துரைத்தவர் டயானாதான்.
டயானா வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்து பத்திரிகைகளுக்கு அவர்தான் எப்போதும் முதல் பக்க கதாநாயகி. துரத்தித் துரத்திப் படமெடுத்தார்கள். துருவித் துருவிச் செய்தி சேகரித்தார்கள். டயானாவை இறுதிவரை தொடர்ந்தன, காதல்களும் கேமராக்களும் அவர் உயிரைக் குடித்தது. மக்களின் இளவரசியாக வாழ்ந்தவர் டயானா. சார்லஸ்- டயானா விரிசல் இவ்வளவு பகிரங்கமான பிறகு விவாகரத்துதான் ஒரே வழி என்று மகாராணியே வற்புறுத்த, விவாகரத்து நடந்தது.

கணவருடனான பிரிவுக்குப் பிறகு, தனக்கான வாழ்வை அவர் வாழத்தொடங்கினார். பாரிஸில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ல் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுநர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர்கள் காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம். அதில் பத்திரிகைப் புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆக வேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில், பறந்தது டயானாவின் கார் விபத்துக்குள்ளானது.

காலங்கள் கடந்தாலும் டயானா…! என்கிற வார்த்தை மட்டும் இப்போதும் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா? என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன