பெட்டாலிங் ஜெயா, ஆக.31-
சிறிய பாக்கெட் சிகரெட்டுகளைக் காட்டிலும் கடத்தல் சிகரெட்டுகள் மிகவும் ஆபத்தானது என மலேசிய மருத்துவ சங்கத்தின் (எம்எம்ஏ) தலைவர் டாக்டர் ரவீந்திரன் நாயுடு தெரிவித்தார்.

கடைகளில் விற்க அனுமதிக்கப்பட்ட சிகரெட்டுகளைக் காட்டிலும் இந்தக் கடத்தல் சிகரெட்டுகள் மிகவும் மலிவானது என்பதால் அவை சுலபமாக கிடைக்கின்றன. இது அமலாக்கத் தரப்பினரின் புகை பிடிப்பதை தடை செய்யும் முயற்சிக்கு எதிராக உள்ளது. இதுதான் அனைத்து பாதிப்புகளுக்கான அடிப்படை காரணமாக இருப்பதாக செய்தியாளர்களை சந்தித்த ரவீந்திரன் கூறினார்.

எப்படியிருப்பினும் இந்த சிறிய பாக்கெட் சிகரெட்டுகள் விற்பனையை சுகாதார அமைச்சே நீக்கி விட்டது. இதற்கு புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதுதான் முக்கியக் காரணமாய் இருக்கும் என்று நான் கருதுகிறேன். அப்படி இந்த சிறிய பாக்கெட் சிகரெட்டுகள் அனுமதிக்கப்பட்டால் இதன் மூலம் புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கைதான் அதிகமாகும்.

இது தொடர்பாகப் புள்ளி விவரங்கள் ஏதும் என்னிடம் இல்லை. இருந்த போதிலும் இது சம்பந்தமான நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.  ஒரு சில உணவகங்கள் மற்றும் பூங்காக்களில் புகை பிடிப்பதற்கான தடையை அமைச்சு அமல்படுத்தி விட்டது.

இதன் அடிப்படையில் புகை பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டியது அவசியமாகும். இதில் புகை பிடிக்கும் அனைவரையும் அப்பழக்கத்திலிருந்து விடுபடச் செய்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனால் அவாறு செய்தால் பலரும் நன்மையடைவார்கள் என ரவீந்திரன் கூறினார்.