சாலையோர மரங்களின் பாதுகாப்பைக் கண்டறியும் பணியில் விரைவு!

பினாங்கு ஜூன் 24-

      இங்கிருக்கும் சாலையோர மரங்களின் ஆரோக்கியத் தன்மையை துல்லியமாகக் கண்டறிவதில், விரைவான செயலாக்க முறைக்கு வழி பிறந்திருப்பது தொடர்பில், மாநில மாநகராண்மைக் கழகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

     மரங்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் துல்லியமாகக் கண்டறியும் உன்னதக் கருவியைப் பயன்படுத்தும் விவேகத் திட்டத்தை, மாநகர் மன்ற உறுப்பினர் ஆர்.காளியப்பன் விடுத்திருந்த பரிந்துரை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அதன் செயலாக்கப் பணி எளிமையாகியிருக்கிறது.

    சாலையோர மரங்கள் எதிர்ப்பாரா நிலையில், திடீரென்று சாய்ந்து விடுவதாலும், அவற்றின் பெருங் கிளைகள் முறிந்து விழுவதாலும், நிகழும் விபரீதச் சம்பவங்களை தவிர்ப்பதற்கு, RESISTOGRAPH

எனப்படும் சம்பந்தப்பட்ட பிரத்தியேகக் கருவி பேருதவியாக, துணைப் புரிவது தொடர்பில், பினாங்கு மாநகராண்மைக் கழகத்தினர் மனநிறைவு கொண்டிருக்கின்றனர்.

     பாதுகாப்பற்ற நிலையில் எதிர்ப்பாராமல் ஆங்காங்கே மரங்கள் விழுகின்ற சம்பவங்களால், உயிருடற் சேதங்கள் உள்ளிட்ட, பல விபரீதங்கள் நிகழ்வதைத் தவிர்க்கும் உத்தேசத்தில், சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கழகத்தின் செயற்குழு கூட்டத்தில், காளியப்பன் சம்பந்தப்பட்ட கருவி தொடர்பில் பரிந்துரை விடுத்திருந்தார்.

     விழக்கூடிய மரங்களின் தன்மையை முன்னதாகவே கண்டறியும் விவேகத் திறனான செயலுக்கு, அக்கருவியின் பயன்பாடு மிகவும் அவசியமென்று காளியப்பன் வலியுறுத்தியிருந்ததால், அதனைக்
கொள்முதல் செய்வதற்கு கழகத்தின் நிதித் துறை வாயிலாக அங்கீகாரம் பெறப்பட்டு, தற்போது அவை உபயோகத்திற்கு தயாராகி இருக்கிறது.

   மரங்களின் ஆயுள் மற்றும் ஆரோக்கியத் தன்மையை துல்லியமாக தெரிந்து கொள்வதற்கு RESISTOGRAPH என்ற அந்த பிரத்தியேகக் கருவி தற்போது செயல்பாட்டிற்கு வந்திருப்பதைத் தொடர்ந்து, மரங்களின் தன்மையை ஆராயும் நடவடிக்கைப் பணிகள் மாநிலத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

   உலக நாடுகள் சிலவற்றில் இக்கருவியின் புழக்கம் நல்லப் பயனை அளித்திருப்பதாகவும், இதனைக் கருத்திற் கொண்டே தாம் இந்த விவேகத் திட்டத்தை பரிந்துரைத்ததாகவும் காளியப்பன் கூறியிருக்கும் நிலையில், அண்மையில் இங்கிருக்கும் சில மரங்களின் மீதான ஆய்வுப் பணிகளில் அவரே அக்கருவியுடன் களமிறங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here