பி எஸ் என் & சிறு மற்றும் நடுத்தர கடனுதவி இந்தியர்களுக்கு ஏமாற்றமே!! – சாஹாபாட் மலேசியா

பெட்டாலிங் ஜெயா ஜூன் 29-
நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நடப்பில் இருந்த காலகட்டத்தில் பிரதமர் அறிவித்திருந்த பிஎஸ்என் (BSN), சிறு மற்றும் நடுத்தர வங்கி கடனுதவி (SME), இந்தியர்களைச் சென்றடையவில்லை என சாஹாபாட் மலேசியா தலைவர் ரமேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார்.

இந்த வட்டியில்லாத கடனுக்கு விண்ணப்பம் செய்த இந்திய வர்த்தகர்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள். அவர்களுக்கு முழுமையான விளக்கத்தை அரசு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவின் காரணமாகச் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார்கள். இந்தத் தருணத்தில் தான் பிஎஸ்என், சிறு மற்றும் நடுத்தர வங்கி ஆகியவற்றின் மூலம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார்.

சஹாபாட் மலேசியாவின் ஆண்டுக் கூட்டத்திற்கு தலைமையேற்ற ரமேஷ் சுப்ரமணியம்

தெக்குனில் வட்டியில்லாத கடன் இந்தியர்களுக்குக் கிடைத்தது. ஆனால் நடுத்தர வர்த்தகர்கள் விண்ணப்பம் செய்த கடன் உதவி குறித்து இதுவரையில் எந்த முறையான தகவலும் இல்லை என ரமேஷ் மேலும் கூறினார்.

அவசர காலத்தில் அரசு அறிவித்த கடனுதவி திட்டத்தை எந்த நிபந்தனைகள் இல்லாமலும் வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் வழக்கம்போல ஆவணங்களையும் மதிப்பீட்டையும் முன்னிறுத்தி இந்தக் கடனுதவி வழங்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என சாஹாபாட் மலேசியா ஆண்டுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தக் கடனுதவி குறித்து அரசாங்கம் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும். அதோடு இந்தக் கடனுதவி எத்தனை இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது என்ற தகவலையும் வெளியிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாகச் சாஹாபாட் மலேசியா, நாடு முழுவதும் 1000 உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்படுவதாக அவர் மேலும் கூறினார். இந்த இயக்கத்தில் மலேசிய இந்திய காங்கிரஸ் சார்ந்தவர்கள் இருப்பதால் கட்சியின் நிலைப்பாடு, சாதனைகள் கடந்து வந்த பாதைகள் குறித்து வருங்காலச் சமுதாயத்திற்கு உணர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே மஇகா கட்சியின் தலைவரான டான் ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் மேலவைத் தலைவர் பொறுப்பிலிருந்து விடை பெற்றுள்ளார். அவரின் உயரிய சேவையைப் பாராட்டி மற்றொரு உயரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட வேண்டுமென ரமேஷ் சுப்ரமணியம் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆண்டுக் கூட்டத்தில் 11 மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here