பத்துகேவ்ஸ், ஜூன் 30-

திருமணம் நடத்த திட்டமிடும் நபர்களுக்கு உதவி புரியும் வகையில் மலேசிய திருமணத் தொழில்முனைவோர் சங்கம் (பிபிஎம்பிஎம்) அமைக்கப்பட்டுள்ளது. அதோடு இத்துறையின் கீழ் 20,000 மேற்பட்ட வேலைகளை நாடு முழுவதும் வழங்க அஃது உத்தேசித்துள்ளது.

Covid-19 கிருமி தொற்றுக் காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தில் பலர் வேலை இழந்தனர். அப்படி வேலை இழந்த மலேசியர்களுக்கு இந்தச் செயல் திட்டம் நிச்சயம் உதவும் என்று அதன் தலைவர் ஜரீனா மொகிதீன் கூறினார்.

நாடு முழுவதும் மிகப்பெரிய உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் கொண்ட பிபிஎம்பிஎம் சுமார் 20,000 வேலை வாய்ப்புகளை வழங்க சங்க உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படும் என்று பத்து கேவ்ஸில் உள்ள எமரோட் மாநாட்டு மண்டபத்தில் சங்க உறுப்பினர்களுடன் நடந்த ஓர் அமர்வில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மலேசிய திருமணத் தொழில்முனைவோர் சங்கம் (பிபிஎம்பிஎம்) தலைவர் ஜரீனா மொகிதீன்

இஸ்லாமியர்களின் திருமணம் சார்ந்த எந்த அமைப்புகளும் செயல்படாதது குறித்துத் தாம் அறிந்து கொண்டதால் அவர்களின் நலனை பாதுகாக்க இச்சங்கம் தொடங்க பட்டதாகவும் ஜரீனா கூறினார்.

கடந்த ஜூன் 18 ஆம் தேதி பதிவு பெற்ற இந்தச் சங்கத்தில் தற்போது நாடு தழுவிய நிலையில் 841 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
இஃது ஒரு சிறிய தொழில்துறை அல்ல. இதன் கீழ் 30 துணைத் துறைகள் உள்ளன. திருமணத்தில் கூடாரங்கள், உணவு வகைகள், கேமரா ஒளிப்பதிவு, நிழல் படம், அலங்காரம், வாடகை உடைகள், மேசை நாற்காலிகள், ஒப்பனை, தையல் என பல இவற்றில் அடங்கியுள்ளன என்றார் அவர்.

covid-19 காலகட்டத்தில் சுமார் 4 மாதங்களாக இதில் எந்தத் துறைகளும் செயல்படவில்லை. மலேசியாவில் உள்ள அனைத்து இனங்களையும் பிரதிநிதிக்கும் இத்துறை சார்ந்த அனைத்து தொழில் முனைவர்களும் இச்சங்கத்தில் இணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

இதனிடையே ஜூலை 1ஆம் தேதி தொடக்கம் திருமணங்கள் உட்பட அனைத்து சமூக நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்ய அரசாங்கம் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனிடையே எங்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கிய அரசாங்கத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய அவர், திருமணத்தை நடத்துவதற்கு அரசு அறிவித்துள்ள நடைமுறைகள் நிச்சயம் கடைபிடிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.