நாட்டுச் சின்னத்தை இழிவுப்படுத்துவதா! மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்!

கோலாலம்பூர், ஜூலை 1-

ரெபோர்மாசி, ரெசிஸ்டன், அண்ட் ஹோப் இன் நியூ மலேசியா’ என்ற புத்தகத்தின் முகப்பு அட்டையில் நாட்டுச் சின்னத்தை இழிவுப்படுத்தும் வகையில் இடம்பெற்றிருக்கும் சித்திரத்திற்கு எதிராக மஇகா இளைஞர் பகுதி கண்டன குரல் எழுப்பியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று அப்புத்தகத்தின் ஆசிரியர் கேன் வோங்கிற்கு எதிராக தேசிய முன்னணி இளைஞர் பகுதியும் பாஸ் இளைஞர் பகுதியும் இணைந்து டாங் வாங்கி காவல் துறை தலைமையகத்தில் புகார் அளித்தனர்.

இதற்கு, கூட்டரசு பிரதேசத்தின் தேசிய முன்னணி இளைஞர் பகுதி தலைவர் முகமாட் நிசாம் தலைமையேற்ற வேளையில், மஇகாவின் சார்பில் அதன் தேசிய இளைஞர் பகுதி செயலாளர் தியாகேஸ் கணேசன் மற்றும் கூட்டரசு பிரதேச மஇகா இளைஞர் பகுதித் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களோடு மசீச மற்றும் பாஸ் இளைஞர் பிரிவினரும் உடன் இருந்தனர்.

நாட்டுச் சின்னம் என்பது அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். அதன் மாண்பைக் குறைக்கும் எந்த ஒரு செயலையும் பார்த்துக் கொண்டு மஇகா இளைஞர் பகுதி அமைதி காக்காது.

எனவே, இப்புத்தகத்தின் ஆசிரியர், தொகுப்பாளர், வெளியீட்டாளர் என அனைவரின் மீதும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மஇகா இளைஞர் பகுதியின் சார்பில் அதன் செயலாளர் தியாகேஸ் கேட்டுக்கொண்டார்.