எழுமின் அமைப்பின் சீரிய முயற்சி ; வர்த்தகத்தில் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி!

பெட்டாலிங் ஜெயா ஜூலை 6-

Covid-19 கிருமித் தொற்றிலிருந்து மலேசியா விடுபட்டு வரும் நிலையில் தமிழ் வர்த்தகர்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் வகையில் எழுமின் அமைப்பு தனது முதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

தமிழ்ச் சமுதாயம் வர்த்தகத் தறையில் மேம்பட்டு வர்த்தகச் சமுதாயமாக உருமாற வேண்டும் என்பதுதான் எழுமின் அமைப்பின் முதன்மை நோக்கமாகும். உலக அளவில் செயல்படும் இம் அமைப்பு மலேசியாவிலும் மிகச் சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்றது. அந்த வகையில் 110 மலேசிய பேராளர்கள் கலந்துகொண்ட தொழிலதிபர்கள், திறனாளர்கள் மாநாடு பெட்டாலிங் ஜெயாவில் நடந்தது.

மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்

இதில் தொழில்நுட்ப வசதியின் மூலம் 23 நாடுகளின் வர்த்தகர்களும் நேரடி காணொளி மூலம் பங்கேற்று தங்களின் அனுபவங்களையும் வர்த்தக வாய்ப்புகள் குறித்தும் பரிமாறிக்கொண்டனர். மலேசியாவில் உள்ள வர்த்தகம் சார்ந்த தொழில் முனைவர்கள் உட்பட வங்கி கடனுதவி சார்ந்த வல்லுனர்களும் அதிகாரிகளும் பங்கேற்று விளக்கமளித்தனர்.

எழுமின் அமைப்பின் மலேசிய தலைவர் சரவணன் சின்னப்பன், covid-19 நோய்க் கிருமி தொற்றின் தாக்கத்திற்குப் பிறகு மலேசியாவில் நடக்கும் முதல் தொழில்முனைவர் மாநாடு இதுவென மகிழ்ச்சி தெரிவித்தார்.

மலேசியா இந்த நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டிருப்பதால் உலகத்தில் பல்வேறான பகுதியில் இருக்கும் வர்த்தகர்கள், மலேசியாவை ஒரு மையப்பகுதியாகப் பயன்படுத்தி வர்த்தகத்தில் ஈடுபடலாம் என அழைப்பு விடுத்தார்.

சவால்களை சமாளிப்பது எப்படி என்பது குறித்து நாடறிந்த பேச்சாளர் பாண்டித்துரை விளக்கம் அளித்தார்..

ஏற்றுமதி இறக்குமதி என அனைத்திற்கும் மலேசியா ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். காரணம் நாம் நோய் தொற்றிலிருந்து விடு பட்டுள்ளோம். இத்தருணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு மலேசியத் தமிழ் வர்த்தகர்கள் தங்களின் வியாபாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சரவணன் அறிவுறுத்தினார்.

இந்த நடவடிக்கை ஒவ்வொரு மாநிலத்திலும் முன்னெடுக்கப்படும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். இணையம் வாயிலாக எப்படி வர்த்தகம் செய்வது? covid-19 நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக வர்த்தகத்துறை எவ்வாறான மாற்றங்களைக் கண்டுள்ளது? சவால்களை எதிர்கொள்வதற்கு எம்மாதிரியான நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்? என பல்வேறு விளக்கங்கள் இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டதாக சரவணன் சின்னப்பன் தெரிவித்தார்.