தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்!- இந்திராணி செல்வகுமார் அறைகூவல்

கோலாலம்பூர் ஜூலை 6-

1978ஆம் ஆண்டு தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்றளவும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாக PENERAJU INSAN அமைப்பின் செயலாளர் இந்திராணி செல்வகுமார் தெரிவித்தார்.

தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பில் 70 விழுக்காட்டினர் இந்தியர்கள். இப்பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது மக்களுக்கான அடிப்படை வசதிகளும் உருவாக்கித் தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதற்கான நில ஆவணங்களும் தயாராகின. 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் அந்தக் குடியிருப்புப் பகுதியில் சில அடிப்படை வசதியும் உருவாக்கப்படாதது குடியிருப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக இந்திராணி கூறினார்.

சுங்கை சிப்புட் அமைந்துள்ள தாமான் துன் சம்பந்தன் குடியிருப்புப் பகுதியில் தற்போது 5000 பேர் வசிக்கிறார்கள்.

இந்தக் குடியிருப்பு பகுதியை உருவாக்கும் போது ஹெஸ்ட்ரல் ஹைட் நிறுவனம் இளைஞர் விளையாட்டு மன்றம், இந்து ஆலயம், பள்ளிவாசல், சமூக மண்டபம், சிறார் விளையாட்டு மைதானம், மாநாட்டு மண்டபம் அமைக்கப்படும் என உறுதி அளித்தது.
இதில் சமூக மண்டபம், சிறார் விளையாட்டு மைதானம், பள்ளிவாசல், மாநாட்டு மண்டபம் ஆகியவை கட்டிமுடிக்கப்பட்டன.

ஆனால் சந்தை, இந்து ஆலயம் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றது. இதனிடையே 2004ஆம் ஆண்டு பேரா மாநில தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் ஆறு நிலங்களின் பெயர் மாற்றம் காணப்பட்டதாக அறிகின்றோம்.

இந்த நிலங்கள் ஒரு கூட்டுறவு நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்ளது. இது குறித்துக் கேள்வி எழுப்ப நாங்கள் தயாராக இல்லை. ஆனால் அங்கிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதைப் பேரா மாநில அரசு உறுதிசெய்ய வேண்டுமென இந்திராணி வலியுறுத்தினார்.

முன்னதாக இது குறித்த மகஜரையும் மாநில மந்திரி பெசார் அலுவலகத்தில் அவர் ஒப்படைத்துள்ளார். அதனை மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனிடையே அங்குள்ள மக்கள் சமூக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குச் சமூக மண்டபம் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றார்போல் இல்லை. அதைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆலயத்திற்கான நிலம் முற்றிலுமாகப் புற்கள் மண்டி கிடக்கின்றது.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும். அதற்கு மாநில அரசு உடனடி நடவடிக்கையை முன்னெடுப்பது அவசியம் என இந்திராணி செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.