ஆஸ்ட்ரோ தமிழ் ஒளியலையில் நீக்கப்பட்ட 3 அலைவரிசைகளுக்குத் தகுந்தப் பரிகாரம் காண கோரிக்கை!

பினாங்கு ஜூலை 7-

ஆஸ்ட்ரோ தமிழ் ஒளியலையில் அடக்கம் கண்டிருந்த, ஜெயா டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி ஆகிய 3 அலைவரிசைகள், கடந்த ஜூன் திங்கள் முதல் நீக்கப்பட்டு விட்ட நிலையில், அவற்றுக்குத் தகுந்தப் பரிகாரம் காணப்படாமலிருப்பது தொடர்பில், பினாங்கு தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்கத் தலைவர் நசீர் முகைதீன் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட 3 அலைவரிசைகளும் “சக்கரவர்த்தி” என்ற சிப்பத்தில் (Package) அடங்கியிருந்த பட்சத்தில், அவற்றுக்குத் தனிக் கட்டணம் வசூலிக்கப்படிருந்ததை நினைவு கூர்ந்திருக்கும் நசீர், தற்போது அந்த 3 அலை வரிசைகளும் நீக்கப்படு விட்டதால், ஆஸ்ட்ரோ நிர்வாகப் பொறுப்பாளர்கள் அக்கட்டணத்தைத் திருப்பித் தர தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருந்தாத காரணத்தை முன் வைத்து, அதிரடியாக ஒரே நேரத்தில் 3 அலைவரிசைகளை நீக்கி விட்டிருக்கும் ஆஸ்ட்ரோ தரப்பினர், அதற்குத் தகுந்தப் பரிகாரமாக ஏதாவது 3 தமிழ் அலைவரிசைகளை இணைத்து, முறையான வகையில் அதற்கு நிவர்த்தி காண வேண்டுமென்று அவர்கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் நாட்டில் ஜெயா, ராஜ், கலைஞர் ஆகிய அலைவரிசைகளுக்கு அப்பாற்பட்டு, 50க்கும் மேற்பட்ட அலைவரிசைகள் இயங்கிக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் நசீர், அவற்றில் ஏதாவது 3 அலைவரிசைகளை மாற்றமாகத் தந்து, நிகழ்ந்திருக்கும் குறைபாட்டுக்கு சரியானத் தீர்வு காண்பதே, அதிருப்தி கொண்டிருக்கும் ரசிகர்களை மகிழ்விப்பதற்கான உகந்த வழிமுறை
என்று, அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட 3 அலைவரிசைகளுக்குப் பதிலாக தற்போது “ZEE” எனப்படும் ஒரேயொரு அலைவரிசையை அளித்து விட்டு, நிகழ்ந்திருக்கும் குறை பாட்டுக்கு சரியான நிவர்த்தி என்று இறுமாந்திருக்கும் ஆஸ்ட்ரோ நிர்வாகத்தினரின் போக்கு, நியாயமற்ற செயல் என்று நசீர் சினம் கொண்டுள்ளார். தரமான சேவையை வழங்குவதாகக் கூறிக் கொண்டு, தமிழ் வாடிக்கையாளர்களுக்கு எதிராகச் செயல்படுவது தர்மம் தானா? எனவும் அவர் முறையிட்டுள்ளார்.

“புதுயுகம்”, “புதிய தலைமுறை”, “வசந்த்”, “வேந்தர்”, “கேப்டன்”, “தந்தி” போன்ற பல்வகை தமிழ் அலைவரிசைகளில் ஏதாவது மூன்றைக் கொடுத்து, நீக்கப்பட்டதற்குச் சரியான வகையில் பரிகாரம் காணும் நடவடிக்கைகளில், ஆஸ்ட்ரோ தமிழ் ஒளியலை தரப்பினர் உடனடியாக ஈடுபாடு கொள்ள வேண்டுமென்று, அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீக்கப்பட்ட 3 அலைவரிசை சிப்பத்திற்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித் தராமல், தரமற்ற சேவைக்கு வழி கண்டிருக்கும் ஆஸ்ட்ரோ தரப்பினரின் ஆணவப் போக்கு இனியும் தொடருமானால், அதற்கு எதிராக, உரிய முறையில் புகார் கூறுவதற்கும் தாம் தயங்கப் போவதில்லை
என்று, நசீர் சூளுரைத்துள்ளார்.