போலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது!

புத்ராஜெயா, ஜூலை 8-

மஇகா இளைஞர் பிரிவினர் நேற்று தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் சிறப்புச் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். போலி முகநூல் பக்கங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவிவரும் போலிச் செய்திகள் குறித்து இச்சந்திப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இன்றையக் காலக்கட்டத்தில் சமூக ஊடகங்களில் அதிகமான போலிச் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. நாட்டு மக்களிடையே நம்பத்தகுந்த செய்திகளைக் கொண்டு சேர்க்கும் வண்ணம் தேசிய முன்னணி அரசால் போலிச் செய்தி தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இருந்த போதும், அதற்குப் பின் அரசாங்கம் அமைத்த நம்பிக்கைக் கூட்டணி அச்சட்டத்தை அகற்றியது. முந்தைய நம்பிக்கைக் கூட்டணி அரசு போலிச் செய்தி தடுப்புச் சட்டத்தை அகற்றியதிலிருந்து, இச்செயல் மேலும் அதிகரித்து வருகின்றது.

இதன் விளைவாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் இணையப் பகடிவதையால் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்றைய காலக்கட்டத்தில் அதிகமாக நடைபெறும் இணையப் பகடிவதையையும் போலிச் செய்தி பரவலையும் மஇகா இளைஞர் பகுதி வன்மையாகக் கண்டிக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று நடைபெற்ற சிறப்புச் சந்திப்பில் இந்த இணையப் பகடிவதை மற்றும் போலிச் செய்தி பரவலைத் தடுப்பது தொடர்பான சில ஆலோசனைகளைத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் மஇகா இளைஞர் பகுதி வழங்கியது.

இச்சிறப்புச் சந்திப்பிற்கு மஇகா இளைஞர் பிரிவின் சார்பில் அதன் தேசிய செயலாளர் தியாகேஸ் கணேசன் தலைமையேற்றிருந்த வேளையில், தகவல் பிரிவுத் தலைவர் பாலமுரளி, உச்சமன்ற உறுப்பினர் எம்.ஜி.விஜய், தமிழ் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.