பேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்!

ஈப்போ, ஜூலை 8-

பேரா மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் விவகாரங்களைக் கவனிக்க ம.இ.கா.வைச் சேர்ந்த நிகராளியை நியமிக்க வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகள் ஓன்றிணைந்து வலியுறுத்தியுள்ளன.

பேரா மாநில இந்தியர்களின் தேவைகளையும் சமூக நலனையும் காக்க வேண்டி இந்த நியமனம் அவசியமாகிறது என அதன் தலைவர் டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் தெரிவித்தார்.

ம.இ.கா. மலேசியாவில் மிகவும் நேர்த்தியான கட்சி. இந்தியர்கள் அதிகமாக உறுப்பியம் பெற்றுள்ள கட்சி. நாட்டின் விடுதலை காலம் தொட்டே இக்கட்சி இந்தியர்களின் உரிமைக்காகக, முக்கியமாகச் சமூகவியல், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் குரல் கொடுத்து வந்துள்ளது என ஜெயபாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்த கோரிக்கை மனுவை பேரா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அகமாட் ஃபைசால் அசுமுவிடம் சேர்க்க அவரின் துணை நிர்வாக அதிகாரி அசாட் சாஃப்வானிடம் டாக்டர் ஜெயபாலன் பேரா மாநில அரசு செயலகத்தின் நுழைவாயிலில் அதனை ஒப்படைத்தார்.

பேரா மாநில அர்சுசாரா இயக்கங்களின் பிரதிநிதிகளுடன் ஜெயபாலன் (நடுவில்)

தேசியக் கூட்டணி பேரா மாநிலத்தில் ஆட்சி அமைத்த பின்னர் இந்தியர்களுக்கான நிகராளி இதுவரை நியமிக்கப்படாததையும் டாக்டர் ஜெயபாலன் சுட்டிக் காட்டினார். எனவே, இவ்வகாரம் குறித்துப் பேரா மாநில மந்திரி பெசார் வெகு விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இம்மாநிலத்தில் இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் போய்விடும் எனவும் இம்மனுவின் வழி அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாகப் புந்தோங், கம்போங் சிமீ போன்ற வட்டரங்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இது போன்ற வட்டாரங்களில் முந்தையக் காலங்களில் ம.இ.கா. மிக அணுக்கமாக இந்திய மக்களுடன் பயணித்துத் தனது சேவையை வழங்கியுள்ளது எனப் பேரா மாநில இந்தியப் பத்திக்கை விநியோகிப்பாளர் சங்கத்தின் தலைவர் கார்த்திக் தெரிவித்தார்.

எனவே, இந்தியர்களின் பிரச்சனைகளைக் கையாளூவதில் 60 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்ட ம.இ.கா.வின் நிகராளி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் பரிந்துரை எனக் கார்த்திக் மேலும் கூறினார்